Rajasthan Crisis: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா அசோக் கெலாட்..? அமைச்சர்கள் சொல்வது என்ன..?
ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை் அசோக் கெலாட் ராஜினாமா செய்ய மாட்டார் என்று அந்த மாநில அமைச்சர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தேர்தல் காரணமாக, ராஜஸ்தானில் அசோக் கெலாட்டிற்கும், சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள அசோக் கெலாட் மீது சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இதையடுத்து, டெல்லி சென்ற அசோக் கெலாட் சோனியாகாந்தியை இன்று மாலை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு அசோக் கெலாட்டின் ஆதரவாளரும், அந்த மாநில அமைச்சருமான பிரதாப்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அசோக் கெலாட் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்று உறுதியாக கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ அசோக் கெலாட் தலைமையின் கீழே காங்கிரஸ் செயல்படும். அவர் ராஜினாமா செய்வது பற்றி நாங்கள் ஆலோசிக்கவே இல்லை. அவர் இன்று ராஜினாமா செய்யவில்லை. இனியும் ராஜினாமா செய்யப்போவதில்லை” என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
மேலும், மற்றொரு ராஜஸ்தான் மாநில அமைச்சர் விஸ்வேந்திர சிங் பேசும்போது, அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது 5 ஆண்டுகளை முதல்வர் பதவியை நிறைவு செய்வார் என்று கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாகவும், அவரை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட உள்ள காரணத்தால், ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியது. ஆனால், அசோக் கெலாட் ஆதரவாளர்களான 92 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த மோதல் போக்கின் காரணமாக ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு சசி தரூரும் போட்டியிட உள்ளார். மேலும், மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கும் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தனக்கு எதிரான எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : DA Hike: 47 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது மத்திய அரசு...
மேலும் படிக்க : PFI Ban : பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவுக்கான தடை: வெடிகுண்டு தயாரிப்பு ஏடு.. மிஷன் 2041.. என்.ஐ.ஏ வட்டாரங்கள் தகவல்..