Amethi: மீண்டும் அமேதி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி ..பக்காவாக ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்
வரவருக்கும் தேர்தலில் ராகுல் காந்தி, எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதி அமேதி. உத்தர பிரசேதத்தில் அமைந்துள்ள இந்த தொகுதியில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தலில் (இடைத்தேர்தல் உள்பட) 13 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, நேரு குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டுதான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்கள்.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி:
குறிப்பாக ராகுல் காந்தி, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்பியாக பதவி வகித்தார். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2019ஆம் ஆண்டு, அமேதி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
வயநாட்டில் வெற்றிபெற்றபோதிலும் அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் (தற்போது மத்திய அமைச்சர்) தோல்வி அடைந்தார். ராகுல் காந்தியால் 4 லட்சத்து 13 ஆயிரத்து 394 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இந்த சூழலில், வரவருக்கும் தேர்தலில் ராகுல் காந்தி, எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டள்ள அஜய் ராயிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மீண்டும் அமேதியில் களமிறங்கும் ராகுல் காந்தி:
அதற்கு பதில் அளித்த அவர், "நிச்சயமாக அமேதி தொகுதியில்தான் ராகுல் காந்தி போட்டியிடுவார். அதற்காகதான், அமேதி மக்கள் இங்கு வந்துள்ளனர். வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட விரும்பினால், எங்கள் தொண்டர்கள் உயிரை கொடுத்து அவரை வெற்றிபெற வைப்பார்கள்" என்றார்.
தற்போது அமேதி தொகுதி எம்.பி-ஆக உள்ள ஸ்மிருதி இரானி குறித்து கேள்விக்கு பதில் அளித்த அஜய ராய், "அவர் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டார். சர்க்கரையின் விலையை கிலோவுக்கு 13 ரூபாயாகக் குறைப்பதாக அவர் கூறினார். அவரால் அதை செய்ய முடியுமா? ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கொடியை ஏற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம்" என்றார்.
பிரதமர் மோடியின் கோட்டையில் போட்டியிடுகிறாரா பிரியங்கா காந்தி?
கடந்த சில மாதங்களாகவே, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "வாரணாசி மக்கள் பிரியங்கா காந்தியை விரும்புகிறார்கள். வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார். ரேபரேலி, வாரணாசி, அமேதி ஆகிய தொகுதிகளில் பாஜகவுக்கு போட்டி கடினமாக இருக்கும்" என்றார்.