Rahul Gandhi : உண்மைய பாத்து பயப்படுறாங்க...பாஜகவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி..!
கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![Rahul Gandhi : உண்மைய பாத்து பயப்படுறாங்க...பாஜகவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி..! Rahul gandhi slams BJP over health minister letter to him urges him to stop Bharat Jodo Yatra Rahul Gandhi : உண்மைய பாத்து பயப்படுறாங்க...பாஜகவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/de96d115189922bf0b2faad8450c4bac1671710122040224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது ஹரியானாவை எட்டி உள்ளது.
அடுத்தபடியாக, நடைபயணம் டெல்லியை சென்றடைய உள்ளது. இதற்கிடையே, சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. அதேபோல, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நடைபயணத்தில் முகக்கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "இது அவர்களின் (பாஜக) புதிய யோசனை. கொரோனா வருகிறது. யாத்திரையை நிறுத்துங்கள் என்று எனக்கு கடிதம் எழுதினார்கள். இவை அனைத்தும் இந்த யாத்திரையை நிறுத்துவதற்கான சாக்குகள். இந்தியாவின் உண்மையை கண்டு அவர்கள் அச்சம் கொள்கின்றனர்" என்றார்.
நடைபயணத்தை நிறுத்துமாறு ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம் எழுதியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட்டும் தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.
ராஜஸ்தானில் நடந்து வரும் நடைபயணத்திற்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் எண்ணிக்கையை பார்த்து பயந்து காங்கிரஸ் தலைமையிலான நடைபயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ராஜஸ்தானில் இந்திய ஒற்றுமை நடைபயணம் டிசம்பர் 21ஆம் தேதி காலையில் நிறைவடைந்தது. ஆனால், பாஜகவும் மோடி அரசாங்கமும் இங்கு கூடியிருந்த பெரும் கூட்டத்தைக் கண்டு மிகவும் பயந்து, மத்திய சுகாதார அமைச்சர் ராகுல் காந்திக்கு டிசம்பர் 20 அன்று கொரோனா விதிகளை பின்பற்றுமாறு கடிதம் எழுதினார்.
பொது சுகாதாரம் குறித்த கவலைகள் உண்மையானதாக இருந்தால், சுகாதார அமைச்சர் பிரதமருக்கு முதலில் கடிதம் எழுதியிருக்க வேண்டும். பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன்பு திரிபுராவில் ஒரு பேரணியை நடத்தினார். அங்கு கோவிட் நெறிமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை.
கோவிட் இரண்டாவது அலையின்போது, மேற்கு வங்கத்தில் பிரதமர் பெரிய பேரணிகளை நடத்தினார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் நோக்கத்தில் அரசியல் இல்லை என்றால் அவரது கவலை நியாயமானது என்றால், அவர் பிரதமருக்கு முதல் கடிதம் எழுதியிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)