தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ராகுல் காந்தி முயற்சி...லண்டனில் பேசியது குறித்து விளக்கம்..!
இச்சூழலில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டம் ஒன்றில் லண்டனில் தான் பேசிய கருத்து குறித்து ராகுல் காந்தி நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி விவகாரம் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனில் இந்திய ஜனநாயம் குறித்து அவர் தெரிவித்த கருத்து நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முடக்குவதற்கு காரணமாக அமைந்தது.
வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து பேசி நாட்டை அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ராகுல் காந்தி விளக்கம்:
இச்சூழலில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டம் ஒன்றில் லண்டனில் தான் பேசிய கருத்து குறித்து ராகுல் காந்தி நீண்ட விளக்கம் அளித்துள்ளார். "இந்திய ஜனநாயகம் பற்றி மட்டுமே கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்காக, தேச விரோதி என்று முத்திரை குத்த முடியாது" என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக பேசிய ராகுல் காந்தி, "இந்த விவகாரத்தில் வேறு எந்த நாட்டையும் தலையிடச் சொல்லவில்லை. இது உள்விவகாரம் என்று நம்புகிறேன். இந்த பிரச்னை தீர்க்கப்படும்" என்றார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் தொடக்கத்தில், கமிட்டி உறுப்பினர்களுக்கு ஜி20 தலைவர் பதவி குறித்த விரிவான விளக்கத்தை ஜெய்சங்கர் வழங்கினார்.
கூட்டத்தின் தொடக்க சுற்றில், ராகுல் காந்தி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், எம்பி ஒருவர், ராகுல் காந்தி குறித்து மறைமுகமாக விமர்சித்ததை அடுத்து, லண்டன் உரை குறித்து விளக்கம் அளித்தார். "அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசி பலன் அடைய முயல்கின்றனர்" என எம்பி ஒருவர் பேசினார்.
கூட்டத்திலேயே பதிலடி அளித்த பாஜக எம்பிக்கள்:
ராகுல் காந்தி விளக்கம் அளித்தபோதிலும், அதற்கு பதிலடி அளித்து பாஜக எம்பிக்கள் பேசினர். இந்த விவகாரம் குறித்து இங்கு பேச இது சரியான மேடை அல்ல என பாஜக எம்பிக்கள் விமர்சித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற சில எம்.பி.க்களும் பாஜக எம்.பி முன்வைத்த வாதத்தை ஆதரித்தனர். பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ராகுல் காந்தி விளக்கம் அளித்ததற்கு ஆதரவு தெரிவித்தனர்.
சில பாஜக எம்பிக்கள், எந்த ஒரு பெயரையும் குறிப்பிட்டு பேசாமல், அவசரநிலை இந்தியாவின் ஜனநாயகத்தின் மிகப்பெரிய கறை என்றும், சிலர் ஜி 20 தலைவர் பதவியை இந்தியா வகிப்பதால் அதிலிருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என்றும் கூறினார்.
கடும் வாக்குவாதத்திற்கு மத்தியில், இது தொடர்பாக ராகுல் காந்தி பதிலளிப்பதைத் தடுத்து நிறுத்திய ஜெய்சங்கர், இந்த விஷயங்களை நாடாளுமன்றத்தில் பேசும்படி அனைவரையும் கேட்டு கொண்டார்.