'ஹலோ, மிஸ்டர் மோடியா'...போன் ஒட்டு கேட்கப்படுவதாக மீண்டும் பரபரப்பை கிளப்பிய ராகுல் காந்தி..!
தனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ளார். பயணத்தின் ஒரு அங்கமாக, கலிபோர்னியாவில் நேற்று அமேரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதையடுத்து, உலக தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையிடமாக விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோருடன் உரையாடினார்.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட ராகுல் காந்தி:
செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, மெஷின் லர்னிங் மற்றும் பொதுவாக மனித குலத்தின் மீது அவற்றின் தாக்கங்கள், நிர்வாகம், சமூக நல நடவடிக்கைகள், தவறான தகவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிபுணர்கள் கலந்தாலோசித்தனர். இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, தனது கருத்துகளை முன்வைத்தார்.
தொழில்நுட்பும் குறித்து விரிவாக பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் பரப்ப வேண்டுமானால், அதிகாரம் ஒப்பீட்டளவில் பரவலாக்கப்பட்ட ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் அதன் விதிகளால் அந்த துறை பாரிய அதிகாரத்துவ தடைகளை எதிர்கொண்டுள்ளது" என்றார்.
பிக் டேட்டா குறித்து பேசிய அவர், "தரவு என்பது புதிய தங்கம். இந்தியா போன்ற நாடுகள் அதன் உண்மையான திறனை உணர்ந்துள்ளன. தரவு பாதுகாப்பில் பொருத்தமான விதிமுறைகள் இருக்க வேண்டும்" என்றார்.
'ஹலோ, மிஸ்டர் மோடியா'
பெகாசஸ் தொழில்நுட்பம் குறித்து பேசிய அவர், "அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது போன் ஒட்டு கேட்கப்படுவது எனக்கு தெரியும்" என்றார். பின்னர், கலாயக்கும் விதமாக, தனது போனை எடுத்த ராகுல் காந்தி, யார் பேசுவது 'ஹலோ, மிஸ்டர் மோடியா' என கேட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனது ஐபோன் ஒட்டு கேட்கப்படுகிறது என்று கருதுகிறேன். ஒரு தேசமாகவும் ஒரு தனி நபராகவும் தரவுத் தகவலின் தனியுரிமை தொடர்பான விதிகளை நீங்கள் நிறுவ வேண்டும். உங்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்க வேண்டும் என்று ஒரு அரசு முடிவு செய்தால், உங்களை யாராலும் தடுக்க முடியாது. இது என் உணர்வு" என்றார்.
அப்போது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பிளக் மற்றும் ப்ளே தொழில்நுட்ப மையத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான சயீத் அமிடி தனது கருத்துகளை எடுத்துரைத்தார். "பிளக் அண்ட் ப்ளேயில் ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் அல்லது இந்திய அமெரிக்கர்கள்" என்றார்.
ராகுல் காந்தி குறித்து பேசிய அவர், "தகவல் தொழில்நுட்பத் துறையைப் பற்றிய ஆழமான புரிதலை அவர் (ராகுல்) வெளிப்படுத்தினார். சமீபத்திய மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பற்றிய அவரது அறிவு மிகவும் ஈர்க்கக்கூடியது" என்றார்.