Punjab : ஆயுத கலாச்சாரத்தை போற்றும் பாடல்களுக்குத் தடை - பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு
ஆயுத கலாச்சாரத்தை போற்றும் பாடல்களுக்கு தடை விதித்து பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
Punjab : சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளானதை தொடர்ந்து, துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்கவிக்கும் பாடல்களுக்கு பஞ்சாப் அரசு தடை விதித்துள்ளது. பொது வெளியில் ஆயுதங்களை வெளிக்காட்டக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சீக்கிய மத நூலை அவமதித்ததாக தேரா சச்சா சவுதாவின் ஆதரவாளர் பிரதீப் சிங் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போல, கடந்த 4ம் தேதி அதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி, போலீசார் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவங்கள் பஞ்சாப்பில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. மேலும், முதல்வர் பகவந்த் மன் தலைமையிலான ஆம் ஆத்மி அரசியல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவு கட்ட பஞ்சாப் அரசு நேற்று பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
In a bid aimed at checking gun culture & to maintain law and order, CM @BhagwantMann has ordered review of all the arm licenses & no issuance of new license in coming three months. It also has been directed that a complete ban should be imposed on songs eulogising gun culture.
— Government of Punjab (@PunjabGovtIndia) November 13, 2022
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “எந்த ஒரு சமூகத்திற்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பேச்சுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கி மற்றும் வன்முறை கலாசாரத்தை ஊக்குவிக்கும் பாடல்களை முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. சமூக ஊடகங்கள் உட்பட பொதுவெளியில் ஆயுதங்களை காட்சிப்படுத்தக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்கூட்டங்கள், மதவழிபாட்டுத் தலங்கள், திருமண விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கும், காட்சிப்படுத்தவும் தடை, ஆயுத உரிமங்களை 3 மாதங்களுக்குள் ஆய்வு செய்து, தவறான நபர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், இதற்காக வரும் நாட்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
TN Rain Alert : அடுத்த 2 மணிநேரம்.. 8 மாவட்டங்களில் பொளக்க போகுது மழை.. எச்சரித்த வானிலை மையம்!