புதுச்சேரியில் கடந்த 24 மணி 96 மிமீ மழை: வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்!
புதுச்சேரியில் கடந்த 24 மணி 96 மிமீ மழை பொழிந்துள்ளது; பல வீடுகளில் வெள்ளம் புகுந்தாலும் அதை அகற்ற போதிய நடவடிக்கையே எடுக்கவில்லை
புதுச்சேரியில் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக 96 மிமீ பதிவானது. பல வீடுகளில் வெள்ளம் புகுந்தாலும் அதை அகற்ற போதிய நடவடிக்கையே எடுக்கவில்லை. முதல்வர், 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தும் யாரும் களத்தில் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டினை மக்கள் முன்வைக்கின்றனர். ஆளுநர் தமிழிசையும் புதுச்சேரியில் தற்போது இல்லாத சூழல் நிலவுகிறது. புதுச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே செவ்வாய்க்கிழமை பகலில் மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இரவு 10 மணி முதல் தொடங்கிய மழை இன்று விடியற்காலை வரை மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது.
புதுச்சேரி நகரப்பகுதி கடலோரப் பகுதி மற்றும் வில்லியனூர், திருக்கனூர், பாகூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் இன்று காலை நிலவரப்படி 96 மிமீ மழை கடந்த 24 மணி நேரத்தில் பொழிந்துள்ளது.இதனால் புதுச்சேரியில் வழக்கம்போல் நகரப் பகுதிகளான பாவணர் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழை நீரானது தேங்கி வருகிறது. புதுச்சேரியில் நான்கு நாள் தொடர் மழையில் ரெயின்போ நகர் தனித்தீவானது. மொத்தம்13 தெருக்கள் இப்பகுதியில் உள்ளன. இங்கு 5000 மக்கள் வசித்து வருகிறார்கள். புதுச்சேரி மையப் பகுதியில் உள்ள இப்பகுதி மழை நீரால் சூழ்ந்ததுடன், தற்போது கழிவுநீரும் சேர்ந்து வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்தது.
தண்ணீர் வீட்டுக்குள் புகுந்ததால் வீட்டு உபயோகப்பொருட்கள் பல வீடுகளில் சேதம் அடைந்தது. சிலர் தங்கள் வீடுகளில் டேபிள் மேல் வாசிங் மெஷிங், பிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களை எடுத்து வைத்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் கூறுகையில், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள இப்பகுதியில் தண்ணீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. முதல்வரோ, அமைச்சரோ யாரும் வந்துக்கூட பார்க்கவில்லை. ஆட்சியர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. நான்கு நாட்களாக தவிக்கிறோம். 22 ஐஏஎஸ் அதிகாரிகள் புதுச்சேரியில் இருந்தும் ஒருவர் கூடவரவில்லை. போலீஸார் தான் வந்து பார்த்தனர். தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கையே எடுக்காமல் உள்ளதால் நோய் பரவும் சூழல் உள்ளது என்றனர்.
ஆளுநர் தமிழிசை தற்போது புதுச்சேரியில் இல்லாத சூழலும் நிலவுகிறது. பொதுமக்கள் பலரும் கூறுகையில், கொரோனவால் பாதித்திருந்தோம். தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர். கிராமப்பகுதியான வில்லியனூர் பெருமாள் நகர் பகுதியில் பழங்குடியினர் குடியிருப்பு முழுக்க வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. அவர்கள் கூறுகையில், வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கையே இல்லை அதிகாரிகளை தொடர்பு கொண்டால் போனை எடுப்பதே இல்லை. யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. புறக்கணிக்கிறார்கள் என்றனர். புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு வந்துள்ளது. அவர்கள் தாழ்வான பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்