(Source: ECI/ABP News/ABP Majha)
Chandrayaan 3 Launched: சந்திரயான்-3 இன் செயல்பாடுகள் எப்படி இருக்கு? வெற்றிப்பாதையா? திட்ட இயக்குனர் சொன்ன தகவல்..
Chandrayaan 3 Launched: விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் செயல்பாடுகள் சீராக இருப்பதாக திட்ட இயக்குனர் வீர முத்துவேல் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் திட்டம்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.
சந்திரயான் – 2 ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ. 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது
அதிநவீன சந்திரயான் 3:
சந்திரயான் 3 விண்கலத்தில் laser doppler velocity metre எனப்படும் புதிய சென்சார் கருவியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளிப்படும் லேசர் ஒலி மூலம், மூன்று வேக திசையான்களின் (Three velocity Vectors) தகவல்களை பெற முடியும். மேலும், இன்ஜின் பிரச்னை, உந்துதல் இடையூறு, சென்சார் செயலிழப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய லேண்டர் கருவியின் எடை 200 கிலோ அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் லேண்டிங்கின் போது குறைந்தது 2 இன்ஜின்கள் செயல்படுவது அவசியம். அதன் காரணமாகவே எடையை குறைக்கும் நோக்கில், சந்திரயான் - 2 விண்கலத்தில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட மத்திய இன்ஜின் தற்போது அகற்றப்பட்டது. மேலும் பல்வேறு கட்டமாக சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3:
இந்நிலையில் இன்று மதியம் சரியாக 2.35 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கேட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய திட்ட இயக்குனர் வீர முத்துவேல், இந்த சந்திரயான் திட்டத்தில் பங்காற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். விண்கலத்தில் அனைத்து செயல்பாடுகளும் இயல்பாக உள்ளது என்றும், லேண்டர் மற்றும் ப்ரொபல்ஷன் செயல்பாடும் சீராக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ”நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளோம் இனி அனைத்து செயல்பாடுகளும் பெங்களுரூவில் இருக்கும் மகேந்திரகிரி விண்வெளி மையத்தில் இருந்து கண்காணிக்கப்படும். இனி வரும் சூழல்கள் மிகவும் சவாலானதாக இருக்கும். நிலவின் புவிவட்டார் பாதையை அடைவது, soft landing, லேண்டரில் இருந்து ரோவர் பிரிவது உள்ளிட்ட பல சவாலான நிகழ்வுகள் உள்ளது. சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றி உறுதுனையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.