Priyanka Chopra: மரகத நெக்லஸில் மூச்சடைக்க வைத்த பிரியங்கா சோப்ரா... வாயடைக்க வைத்த விலை.. இத்தனை கோடியா.?!!
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சகோதரரின் திருமணத்திற்கு அணிந்து வந்த மரகத நெக்லஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன் விலை எத்தனை கோடிகள் தெரியுமா.?

இந்திய திரை உலகில், ஸ்டைல் ஐகானாகவும், புதுமைகளுக்கும் பெயர் பெற்று விளங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் வரை பிரபலம் என்பது அனைவருக்குமே தெரியும். உடை, நகை அலங்காரங்களில் அவரை அடித்துக்கொள்ள ஆளில்லை என்றே சொல்லலாம். அவர் அதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
சகோதரர் திருமணத்தில் திரும்பி பார்க்க வைத்த பிரியங்கா
நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த், நடிகை நீலம் உபாத்யாயாவின் திருமணத்திற்கு வந்த பிரியங்கா சோப்ரா, அனைவரையும் தனது நெக்லஸால் திரும்பி பார்க்க வைத்துள்ளார். முன்னதாக, ஒவ்வொரு நாளும் நடந்த ஹால்டி, மெஹந்தி உள்ளிட்ட நிகழ்வுகளில், ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமான ஸ்டைலிஷான உடையிலும், அதற்கு ஏற்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள நெக்லசுகளும் காண்போர் அனைவரையும் கவர்ந்திழுத்தது. இந்த நிலையில், மெயின் பிக்சரான திருமனத்திற்கு அவர் அணிந்து வந்த மரகத நெக்லஸ், அனைவரையும் மூச்சடைக்க வைத்துள்ளது.
ரூ.70 கோடி மதிப்பிலான மரகத நெக்லஸ்
சகோதரர் சித்தார்த் திருமண நிகழ்விற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த மரகத நெக்லஸ் பல்கேரியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு, மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள தாவரமான கேப்வெனெரிலிருந்து ஈர்க்கப்பட்டது. அதில், 71.2 காரட் சிறிய வைர இலைகளும், 62 மயக்கும் மரகத மணிகளும் என மொத்தம் 130.77 காரட் எடையுடையது. பல்கேரியின் தலைசிறந்த கைவினைக்கலைஞர்களால், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட இந்த நெக்லசுக்கு, ‘தி எமரால்ட் வீனஸ்‘ என பெயரிடப்பட்டுள்ளது. 1,600 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த நெக்லஸின் விலை, 70 கோடி ரூபாய் மதிப்புடையது என கூறப்படுகிறது. ஆனால், பல்கேரியாவிலிருந்து, விலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
இதேபோல், அவர் அணிந்திருந்த லெஹெங்கா, பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவால் வடிவமைக்கப்பட்டது. மிகவும் நேர்த்தியாக, பிரியங்காவுக்காக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த ஆடையில், அவர் கூடுதல் அழகுடன் காட்சியளித்தார்.
இத்தகைய மதிப்புவாய்ந்த நெக்லஸ் மற்றும் ஆடையுடன், நீத்தா அம்பானியின் அருகில் அமர்ந்திருந்த அவரை காணாத கண்கள் இல்லை என்றே சொல்லலாம். பிரியங்காவின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

