Modi Met Kannada Stars: கர்நாடக பிரபலங்களை நேரில் சந்தித்த பிரதமர் மோடி..! சட்டசபை தேர்தலுக்கு கைகொடுக்குமா?
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல்:
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் என்பதால், அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அக்கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் தற்போதே அங்கு முகாமிட தொடங்கியுள்ளனர். அதேநேரம், பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கி, ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
பிரதமர் மோடி பெங்களூரு பயணம்:
இத்தகைய சூழலில் பெங்களூரு சென்ற பிரதமர் மோடி, ஏரோ இந்திய கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து, ராஜ்பவனில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உடன் கன்னட திரையுலகை சேர்ந்த கே.ஜி.எஃப் புகழ் நடிகர் யஷ், காந்தாரா திரைப்படத்தை இயக்கி நடித்த ரிஷப் செட்டி, மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ராஜ்குமார் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமான அய்யோ ஷ்ரத்தா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் உடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் சந்திப்பு:
திரைநட்சத்திரங்களை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரும், இளம் வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில், சமூகத்தில் நன்மதிப்பு கொண்ட பல்வேறு தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.
அய்யோ ஷ்ரத்தா சமூக வலைதள பதிவு:
தொழில்நுட்ப உலகில் ஏற்படும் பணிநீக்கங்கள் தொடர்பாக பேசி சமூக வலைதளங்களில் வைரலான அய்யோ ஷ்ரத்தா, தனது வாழ்க்கையின் பெருமைமிக்க தருணங்களில் இதுவும் ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை தற்போது ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
இணையத்தில் வைரல்:
கர்நாடகாவை சேர்ந்த திரை மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் உடனான, பிரதமர் மோடியின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலகியுள்ளன. குறிப்பிட்ட நட்சத்திரங்கள் பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, அவர்களது ரசிகர்களும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், பிரதமர் மோடியின் கர்நாடக பயணம், செய்திதளங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்கள் முழுவதையும் ஆக்கீரமித்துள்ளது.
பாஜகவின் மேக்ரோ பரப்புரை:
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெருக்களில் இறங்கி வாக்கு சேகரித்து வரும் நிலையில், பாஜகவோ ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயே சென்று வாக்கு சேகரிக்கும் மேக்ரோ பரப்புரையை கையில் எடுத்துள்ளது. கர்நாடக மக்களுடன் கிரிக்கெட் மற்றும் திரைப்படங்கள் என்பது இரண்டற கலந்தது. அரசியலில் ஆர்வம் காட்டாத நபர்கள் கூட, மேலே குறிப்பிட்ட ஏதோ ஒன்றில் நிச்சயம் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அதனை கருத்தில் கொண்டு தான், பெங்களூரு பயணத்தின் போது, பிரதமர் மோடி அந்த மாநிலத்தை சேர்ந்த முக்கிய திரை மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களை சந்தித்ததாக கூறபடுகிறது.
அதிலும் குறிப்பாக அண்மையில் வெளியாகி ஹிட் அடித்த கே.ஜி.எஃப் மற்றும் காந்தாரா திரைப்படத்தின் மூலம், யஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளனர். இந்த சூழலில் அவர்களை பிரதமர் மோடி சந்தித்தது இணையத்தில் வைரலாக, பாஜக தொடர்பான பேச்சும் இணையத்தில் அதிகரித்துள்ளது. இதன் மூலம், எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை அனைத்து தரப்பு மக்களிடையேயும், எளிதாக கொண்டு செல்ல முடியும் என்ற நோக்கிலேயே பிரதமர் மோடி இந்த சந்திப்பை நிகழ்த்தியதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.