Cylinder Price : எல்லாருக்குமான ஹேப்பி நியூஸ்.. அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை..
கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.36 குறைந்து ரூ. 2,045 லிருந்து ரூ. 2,009 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு மாதந்தோறும் முதல் நாளில் வணிகம் மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அந்த அறிவிப்பில் எதாவது விலை குறைப்பு உள்ளதா என்று மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கம். அந்தவகையில் அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.36 குறைந்து ரூ. 2,045 லிருந்து ரூ. 2,009 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒரு யூனிட் வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ. 35.50 குறைத்துள்ளன. இந்த சமீபத்திய விலை மாற்றத்தின் மூலம் தலைநகர் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 1,885க்கு பதிலாக ரூ1,859 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொல்கத்தாவில் 19 கிலோ கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர் ரூ.1,995.50க்கு பதிலாக ரூ. 1,959 ஆகவும், மும்பையில் 19 கிலோ கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர் ரூ. 1,844க்கு பதிலாக ரூ. 1,811.50 ஆகவும், சென்னையில் 19 கிலோ கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர் ரூ. 2,045க்கு பதிலாக ரூ. 2,009ஆகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை பொதுவாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடைசியாக கடந்த ஜூலை 6ம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை யூனிட்டுக்கு ரூ. 8.5 குறைக்கப்பட்டது. இதனால் ஓட்டல்கள் மற்றும் பிற சமையல் தொடர்பான தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. அதேபோல் கொரோனா ஊரடங்கில் இருந்தே பலருக்கும் மத்திய அரசின் சிலிண்டர் மானியம் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் சிலிண்டருக்கு முழு விலையையும் சாமானிய மக்கள் கொடுக்க வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
இதற்கிடையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் 9 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூபாய் 200 மானியமாக வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது சமூக உள்ளடக்கத்திற்கான பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிரபலமான முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது.