"பெரும் உயிர் சேதம்" - ஒடிசா ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்த போப் பிரான்சிஸ்..!
"இறந்தவர்களின் ஆன்மாக்களை எல்லாம் வல்ல இறைவனின் அன்பு கருணைக்கு ஒப்படைப்போம்"
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கோர விபத்தில், 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் நடந்த இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் இந்த மோசமான நிகழ்வு குறித்து, 4 பேர் கொண்ட ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று இரவு 7 மணி அளவில் யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, அருகில் இருந்த தண்டவாளத்தில் ஏறியது. அப்போது, எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது தடம் புரண்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மோதியது.
போப் பிரான்சிஸ் இரங்கல்:
இதையடுத்து, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள், மேலும் சரக்கு ரயில் மீது மோதியது. இதனால், மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்து குறித்து போப் பிரான்சிஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "ஒடிசாவில் நேற்று மூன்று ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட பெரிய உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
"இறந்தவர்களின் ஆன்மாக்களை எல்லாம் வல்ல இறைவனின் அன்பு கருணைக்கு ஒப்படைப்போம். உயிர் இழப்பால் துக்கப்படுவோருக்கு இதயப்பூர்வமான இரங்கலை போப் பிரான்சிஸ் தெரிவித்துக்கொள்கிறார்" என வாடிகனின் மூத்த பாதிரியார் பீட்டர் பரோலினோ தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
"யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை"
விபத்து நடத்த இடத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பிரதமர் மோடி, “இந்த விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது” என்றார். மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரின் வேதனை தான் நன்றாக உணர்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.