சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?
முன்னதாக, தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேவை ஃபட்னாவிஸ் சந்தித்தார். பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஏக்நாத் கட்சே, கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து விலகி சரத் பவார் கட்சியில் தன்னை இனைத்துக் கொண்டார்.
மேற்கு வங்க, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேற்று முதன்முறையாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருந்த நிலையில், பிரஷாந்த் கிஷோரின் இந்த அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன.
ஆனால், இந்த சந்திப்பு அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கத் தேவையில்லை என்று மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், "மேற்கு வங்கசட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் ஆலோசகர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரஷாந்த் கிஷோர் ஏற்கனவே அறிவித்து விட்டார். எனவே, இது இயல்பான சந்திப்பு தான். மேலும், சரத் பவார் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைவர். எனவே, வாழ்கையின் பலதரப்பட்ட மக்கள் அவரை சந்திப்பது இயல்பு தான்" என்று தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா அரசியலில் பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.
உதாரணமாக, கடந்த மே 31ம் தேதி, மகாராஷ்டிரா சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், சரத் பவாரை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார். இது, மகாராஷ்டிரா அரசியலில் பேசும் பொருளாகியது. ஏனெனில், இந்த சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, மாரட்டிய மக்களின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதில் உத்தவ தாக்கேரே படுதோல்வி அடைந்து விட்டதாக ட்விட்டரில் ஃபட்னாவிஸ் கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்த சர்ச்சை முடிவடைவதற்குள், தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேவை ஃபட்னாவிஸ் சந்தித்தார். பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஏக்நாத் கட்சே, கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து விலகி, சரத் பவாரோடு தன்னை இணைத்துக் கொண்டார். மகாராஷ்டிராவின் வட மாவட்டங்களில் மறுக்கமுடியாத ஒரு அரசியல் தலைவராக இருப்பவர் ஏக்நாத் கட்சே. மேலும், இன்றைய தேதியில் அம்மமாநிலத்தின் ஒபிசி தலைவர்களில் முக்கியமான ஒருவராகவும் கருதப்படுகிறார். ஃபட்னாவிஸிடம் கொண்ட முரண்பாடுகள் காரணமாக, பாஜகவில் இருந்து வெளியேறினார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 2ம் தேதி, சரத் பவாருடன், ஏக்நாத் கட்சே அவரின் இல்லத்தில் சென்று கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து, சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே, ஏக்நாத் கட்சேவை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார். இவை அனைத்தும், மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்பட்டாலும், மகாராஷ்டிரா அரசியலில் அதிகாரம் மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாகவே கருதப்பட்டது.
இந்த அரசியல் சூழ்நிலையில் தான், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில், சரத் பவாரின் அண்ணன் மகனும், மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் உடனிருந்தார். இந்த சந்திப்பிக்குப் பிறகு, நரேந்திர மோடிக்கு சாதகமான கருத்துக்களை சிவசேனத் தலவைர்கள் பதிவிட ஆரம்பித்தனர். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஒப்பில்லா தலைவர் என்றும், பாஜக கட்சி பிரதமர் மோடிக்கு கடமைப்பட்டிருப்பதாகவும் சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கூறினார்.
எனவே, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சரத் பவாரை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.
2019 சட்டமன்றத்தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் சிவசேனா மூன்று கட்சிகளும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, பாஜகவை வெளியேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாசிக்க:
பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!
Assembly Elections 2021 | IPAC-இல் இருந்து விலகுகிறாரா பிரஷாந்த் கிஷோர்?