Vande Bharat Express: 5 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..எங்கு? எப்போது? சிறப்பம்சங்கள் என்ன?
ஐந்து வந்தே பாரத் ரயில்களை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு 6 நாள்களுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, இன்று காலை இந்தியா திரும்பினார். இதை தொடர்ந்து, நாளை மத்திய பிரதேசத்திற்கு செல்லும் அவர் 5 வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
காலை 10:30 மணியளவில், ராணி கமலாபதி ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதமர், ஐந்து வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ராணி கமலாபதி - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கஜுராஹோ - போபால் - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மட்கான் (கோவா) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஹதியா - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட உள்ளன.
ராணி கமலாபதி - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மகாகௌஷல் பகுதியை (ஜபல்பூர்) மத்தியப் பிரதேசத்தின் மத்திய மண்டலத்துடன் (போபால்) இணைக்கும். பெரகாட், பச்மாரி, சத்புரா போன்ற சுற்றுலாத் தலங்களும் இந்த ரயில் சேவையால் பயனடையும். இந்த பாதையில் ஏற்கனவே இயக்கப்படும் அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது சுமார் முப்பது நிமிடங்களுக்கு முன்பாக வந்தே பாரத் ரயில்கள் பயண தூரத்தை சென்றடையும்.
கஜுராஹோ - போபால் - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:
மால்வா மண்டலம் (இந்தூர்) மற்றும் புந்தேல்கண்ட் பிராந்தியம் (கஜுராஹோ), மத்திய மண்டலமான போபால் ஆகியவை இடையேயான இணைப்பு மேம்படும். இது மஹாகாலேஷ்வர், மண்டு, மகேஷ்வர், கஜுராஹோ, பன்னா போன்ற முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பயணிகள் பயனடைவர். இந்த ரயில் பாதையில் இருக்கும் அதிவேக ரயிலை விட, இரண்டு மணி நேரம் முப்பது நிமிடங்களுக்கு முன்பாக வந்தே பாரத் ரயில்கள் பயண தூரத்தை சென்றடையும்.
மட்கான் (கோவா) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கோவாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். இது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் ரயில் நிலையம் இடையே இயங்கப்படும். இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது, இது ஒரு மணிநேர பயண நேரத்தை சேமிக்க உதவும்.
தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கர்நாடகாவின் முக்கிய நகரங்களான தார்வாட், ஹுப்பள்ளி மற்றும் தாவங்கேரே, மாநிலத் தலைநகர் பெங்களூருவுடன் இணைக்கப்படும். இது இப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள், மாணவர்கள், தொழிலதிபர்கள் போன்றோருக்கு பெரிதும் பயனளிக்கும். இந்த ரயில் பாதையில் இருக்கும் அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது சுமார் முப்பது நிமிடங்களுக்கு முன்பாக வந்தே பாரத் ரயில்கள் பயண தூரத்தை சென்றடையும்.
ஹதியா - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஜார்கண்ட் மற்றும் பீகாருக்கான முதல் வந்தே பாரத் ஆகும். பாட்னா மற்றும் ராஞ்சி இடையே இணைப்பை மேம்படுத்தும். இந்த ரயில் சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் வணிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இது ஒரு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்கள் பயண நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.