NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?
NITI Aayog Meet: பிரதமர் மோடி தலைமையிலான 10வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

NITI Aayog Meet: பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிதி ஆயோக் கூட்டம்:
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று கூடுகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தின் சாரமாக “விக்சித் பாரத்@47-க்கான விக்சித் ராஜ்யா” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானாது இணைந்து கூட்டாட்சியை வளர்ப்பதையும், இந்தியாவை அதன் சுதந்திரத்தின் 100வது ஆண்டு நிறைவில் வளர்ந்த நாடாக மாற்றும் தேசிய இலக்குடன் மாநில அளவிலான நோக்கங்களை இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக அனைத்து மாநிலங்களுடனும் இணைந்து “இந்திய அணியாக” செயல்பட பிரதமர் மோடி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்த, தைரியமான, நீண்டகால மற்றும் ஒருங்கிணைந்த தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க மாநிலங்களை அனுமதிப்பதை மையமாகக் கொண்டு இந்த விவாதம் நடைபெறும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளின் திட்டங்கள்:
மாநில அரசுகள் தரவுகள் அடிப்படையில் விளைவு சார்ந்த உத்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து மனித வள மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மை, தொழில்நுட்பம், நிர்வாக மறுசீரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு, மேம்பட்ட திறன் மேம்பாடு மற்றும் நிலையான வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவை குறித்து அதிகம் விவாதிக்கப்படலாம். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 4வது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில், 'தொழில்முனைவோர், வேலைவாய்ப்பு மற்றும் திறனை ஊக்குவித்தல் - மக்கள்தொகை ஈவுத்தொகையை மேம்படுத்துதல்' என்ற முக்கிய கருப்பொருளின் கீழ் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
இந்த மாநாட்டில்,
1. அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களில் உற்பத்திக்கு ஒரு செயல்படுத்தும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்
2. அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களில் சேவைகளை செயல்படுத்தும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்
3. கிராமப்புற பண்ணை அல்லாத துறைகளில் MSME மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பு
4. நகர்ப்புறங்களில் MSME மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பு
5. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பசுமைப் பொருளாதாரத்தில் வாய்ப்புகள்; மற்றும்
6. வட்டப் பொருளாதார முயற்சிகள் மூலம் பசுமைப் பொருளாதாரத்தில் வாய்ப்புகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம்:
தீவிரவாதிகளுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமருக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையிலான முதல் பெரிய சந்திப்பு இதுவாகும். இதனால், மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு தரப்பில் இருந்து இதற்கு பதில் வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அதேநேரம், 2025-26 பட்ஜெட்டின் முன்முயற்சிகள் மற்றும் நிலவும் பொருளாதார சவால்கள் குறித்து இன்று விவாதம் நடைபெறலாம். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பயணத்தை வழிநடத்தும் ஒருங்கிணைந்த தொலைநோக்கு திட்டங்களை நிதி ஆயோக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு?
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதிப்பகிர்வு தொடர்பான கோரிக்கைகளை வைக்கவே, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு எடுக்க உள்ள பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து, நிதி ஆயோக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





















