(Source: ECI/ABP News/ABP Majha)
"விவசாயிகளை வைத்து சிலர் அரசியல் செய்தனர்" யாரை சொல்கிறார் பிரதமர் மோடி?
மகாராஷ்டிராவில் இன்று 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உத்தர பிரதேசத்துக்கு பிறகு அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான மகாராஷ்டிராவில் தற்போது, பாஜக - சிவசேனா (உத்தவ் தாக்கரே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி:
இன்னும் 5 மாதங்களில் மக்களவை தேர்தலும் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்த சூழலில், மகாராஷ்டிராவில் இன்று 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நமோ ஷேத்காரி மஹாசன்மன் நிதி யோஜனா என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவில் 86 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அகமதுநகர் சிவில் மருத்துவமனையின் தாய் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
இதை தொடர்ந்து, அகமதுநகர் மாவட்டத்துக்கு சென்ற பிரதமர் மோடி ஷீரடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை மறைமுகமாக விமர்சித்த அவர், "மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிலர் விவசாயிகள் பெயரில் அரசியல் செய்தார்கள்" என குற்றம் சுமத்தினார்.
சரத் பவார் பற்றி விமர்சனம்:
"எனது அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. விவசாயிகள் இப்போது தங்கள் விளைபொருட்களுக்கான எம்எஸ்பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுகிறார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் சிலர் விவசாயிகள் பெயரில் அரசியல் மட்டுமே செய்தார்கள்.
மகாராஷ்டிராவின் மூத்த தலைவர் ஒருவர் நாட்டின் விவசாய அமைச்சராகப் பதவி வகித்தார். நான் தனிப்பட்ட முறையில் அவரை மதிக்கிறேன். ஆனால், அவர் விவசாயிகளுக்கு என்ன செய்தார்? அவர் மத்திய வேளாண் அமைச்சராக இருந்தபோது, இடைத்தரகர்களின் தயவில் விவசாயிகள் இருக்க வேண்டியிருந்தது.
பல மாதங்களாக விவசாயிகள் பணத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் எங்கள் அரசு எம்எஸ்பி பணத்தை நேரடியாக வழங்கி வருகிறது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக 4 முறையும், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை, பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சராகவும் சரத் பவார் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஸ்கெட்ச் ஆந்திராவுக்கு இல்ல தெலங்கானாவுக்கு.. காய் நகர்த்திய பவன் கல்யாண் - செம்ம ட்விஸ்ட்