ஸ்கெட்ச் ஆந்திராவுக்கு இல்ல தெலங்கானாவுக்கு.. காய் நகர்த்திய பவன் கல்யாண் - செம்ம ட்விஸ்ட்
ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது. இந்த கூட்டணியில் பா.ஜ.க.வை கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, அம்மாநில அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புது கட்சி தொடங்கினார்.
இதனால், இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது. ஆந்திரா பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறி கொடுக்க, தெலுங்கு தேசம் கட்சி அங்கு ஆட்சியை பிடித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தெலுங்கு தேச கட்சியை தோற்கடித்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
காங்கிரஸ் கட்சியின் கோட்டை:
தெலங்கானாவை பொறுத்தவரை, கடந்த 9 ஆண்டுகளாக கே. சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆதிக்கம்தான் தொடர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தெலங்கானாவில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.
அதேபோல, இந்த கூட்டணியில் பாஜகவை கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே கூட்டணியை தெலங்கானாவில் தொடர பவன் கல்யாண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவை பவன் கல்யாண் சந்தித்து பேசியுள்ளார்.
ஹைதராபாத்துக்கு செல்ல அமித் ஷா திட்டமிட்டு வரும் நிலையில், அந்த பயணத்துக்கு முன்பாக இந்த கூட்டணியை உறுதி செய்ய ஜன சேனா கட்சி முனைப்பு காட்டி வருகிறது. டெல்லியில் நேற்று நடந்த சந்திப்பின்போது கூட, ஜனசேனா அரசியல் விவகாரக் குழு தலைவர் நாதெண்டல மனோகர், பாஜக தெலங்கானா தலைவர்களிடம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளார்.
காய் நகர்த்திய பவன் கல்யாண்:
சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியில் நடைபெறவுள்ள இந்தியக் காவல் பணியின் (ஐபிஎஸ்) 75ஆவது (பணியில் புதிதாக சேரும் அதிகாரிகளின்) அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக அமித் ஷா நாளை ஹைதராபாத் செல்ல உள்ளார். அணிவகுப்பை தொடர்ந்து நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.
பவன் கல்யாணும் மனோகரும் நேற்று இரவே ஹைதராபாத் திரும்பிவிட்டதாகவும் கூட்டணி தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன்பு பவன் கல்யாண் இன்று ஜனசேனா தெலங்கானா தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என அக்கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
தெலங்கானா பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஏற்கனவே ஹைதராபாத்தில் பவன் கல்யாணை சந்தித்து பேசியுள்ளேன். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக ஜன சேனா கட்சி உள்ளது. பா.ஜ.க. தேசிய தலைவர்களுடன் பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்" என்றார்.