செம்ம சம்பவம் காத்துட்டு இருக்கு..மோடிக்கு விருது வழங்கும் விழா.. மேடையை பகிர்ந்து கொள்ளும் சரத் பவார், அஜித் பவார்
மகாராஷ்டிராவில் அரசியல் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஒரே மேடையை சரத் பவாரும் அஜித் பவாரும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடியின் தலைமை பண்பை அங்கீகரிக்கும் விதமாகவும் மக்கள் மத்தியில் தேசபக்தியை தட்டி எழுப்பியதற்காகவும் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
பிரதமர் மோடிக்கு விருது:
நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை மோடிக்கு வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் அரசியல் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஒரே மேடையை சரத் பவாரும் அஜித் பவாரும் பகிர்ந்து கொள்ள உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், சரத் பவாரின் ஒப்புதலை மீறி பாஜக - சிவசேனா அரசாங்கத்தில் இணைந்து துணை முதலமைச்சராக பதவியேற்று கொண்டது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியது.
விழா மேடையை பகிர்ந்து கொள்ளும் சரத் பவார், அஜித் பவார்:
அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். இதையடுத்து, அஜித் பவார் உள்ளிட்டவர்களை சரத் பவார் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இருவரும் பரஸ்பரம் விமர்சித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், சரத் பவாரும் அஜித் பவாரும் ஒரே மேடையில் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
சரத் பவார், அஜித் பவாரை தவிர மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மோடிக்கு விருது வழங்குவது குறித்து திலக் ஸ்மரக் மந்திர் அறக்கட்டளை தலைவர் தீபக் திலகர் கூறுகையில், "திலக் ஸ்மாரக் மந்திர் அறக்கட்டளை (ஹிந்த் ஸ்வராஜ் சங்கம்) பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலகர் தேசிய விருதை ஆகஸ்ட் 1 ஆம் தேதி லோகமான்ய திலகரின் 103ஆவது நினைவு நாளில் வழங்கவுள்ளது.
ஆத்மநிர்பர் பாரத் என்ற கருத்தின் கீழ் பிரதமரின் உச்ச தலைமையின் கீழ் இந்தியா முன்னேற்ற படிகளில் ஏறி வருகிறது. மக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை எழுப்பி, இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பிடிக்க வைத்தவர் பிரதமர் மோடி. அவரது விடாமுயற்சியை கருத்தில் கொண்டு, அவரது பணியை சிறப்பித்து, திலக் ஸ்மாரக் மந்திர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் அவரை இந்த விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்.