பிரதமர் மோடி பெருமிதம் “ நமது விஞ்ஞானிகள் விண்வெளியிலே செடி வளர்த்து அசத்தியுள்ளனர்.!
PM Modi Space Docking: விண்வெளியிலே இரண்டு விண்கோள்கள் இணைக்கப்படும் செயல்பாட்டைத், விண்வெளியில் இணைப்பு செய்து நமது விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் இன்று மக்களுடன் உரை நிகழ்த்தினார், அவர் தெரிவித்ததாவது , “ விஞ்ஞானிகள், விண்வெளித்துறையில் மேலும் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தினார்கள். நமது விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைப்புச் செய்தார்கள். விண்வெளியிலே இரண்டு விண்கோள்கள் இணைக்கப்படும் செயல்பாட்டைத் தான் விண்வெளியில் இணைப்பு – Space Docking என்று அழைக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பம், விண்வெளியில் உள்ள விண்வெளி நிலையம் வரை பொருட்களை அனுப்பவும், குழுப்பயணத்திற்கும் மிக முக்கியமானது. பாரதம் இப்படிச் செய்யக்கூடிய நான்காவது நாடாக ஆகியிருக்கிறது, இதிலே நமக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.
நண்பர்களே, நமது விஞ்ஞானிகள் விண்வெளியிலே செடி வளர்த்து, அவற்றை உயிர்ப்போடு இருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக இஸ்ரோவின் விஞ்ஞானிகள், காராமணி விதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று அனுப்பப்பட்ட விதைகள் விண்வெளியிலே முளைவிட்டிருக்கின்றன. இது மிகவும் உத்வேகம் அளிக்கவல்ல ஒரு பரிசோதனையாகும். எதிர்காலத்தில் விண்வெளியிலே காய்கறிகளை பயிர்செய்யும் பாதையும் திறக்கும்.
நமது அறிவியலார்கள் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார்கள் என்பதை நமக்கு இது எடுத்துக் காட்டுகிறது. நண்பர்களே, இந்தச் சாதனைகள் அனைத்தும், பாரதநாட்டின் விஞ்ஞானிகளும், நூதனங்களைப் படைப்போரும் எதிர்காலச் சவால்களுக்குத் தீர்வுகளை அளிக்கவல்ல தொலைநோக்காளர்கள் என்பதற்குச் சான்று பகிர்கின்றன. நமது தேசம் இன்று விண்வெளித் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கற்களை நிறுவி வருகின்றது. நான் நமது நாட்டின் விஞ்ஞானிகள், புதுமைகளின் கண்டுபிடிப்பாளர்கள், இளவயது தொழில்முனைவோர் ஆகியோருக்கும் தேசத்தின் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.





















