PM Modi: இந்திய அரசியலமைப்பு மாற்றப்படுகிறதா? மனம் திறந்த பிரதமர் மோடி
இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படுகிறதா? என்பது குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறிய நிலையில், மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல இந்தியா திட்டமிட்டதாகவும் இதை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியா அதிகாரி ஒருவர்தான் இந்த சதி திட்டத்தை தீட்டியதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி:
அமெரிக்காவில் ஆயுதங்களையும் போதை பொருள்களையும் சட்ட விரோதமாக விற்று வரும் நிக்கில் குப்தா என்பவர் மூலம், கூலிப்படையை சேர்ந்த ஒருவருக்கு பணம் கொடுத்து பன்னூனை கொலை முயற்சி நடந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இந்த சதி திட்டத்தில் ஈடுபட்ட இந்தியா உளவுத்துறையை சேர்ந்த அதிகாரியின் பெயரை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை.
இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு உலக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மெளனம் கலைத்துள்ளார். புகழ்பெற்ற பைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார்.
அப்போது, பன்னூன் கொலை முயற்சி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "இது தொடர்பாக யாராவது எங்களுக்கு ஏதாவது தகவல் கொடுத்தால், நாங்கள் அதை நிச்சயமாக ஆய்வு செய்வோம். எங்களுடைய குடிமகன் யாரேனும் நல்லதோ அல்லது கெட்டதோ செய்திருந்தால், இதுகுறித்து விசாரிக்க தயாராக இருக்கிறோம். சட்டத்தின்படி நடப்பதில் உறுதியாக உள்ளோம்" என்றார்.
"விமர்சிக்க உரிமை உண்டு"
அரசியலமைப்பை மாற்றி அமைக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் மோடி, "முன்னேற்ற பாதையில் செல்ல உள்ளோம். வரும் 2024 தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. வளர்ச்சி பாதையில் செல்வதை விரைவுப்படுத்த அவர்கள் (மக்கள்) விரும்புகிறார்கள். அவர்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்த கட்சி எது என்பது அவர்களுக்கு தெரியும். அந்த கட்சிதான், அவர்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.
சாமானியர்களின் வாழ்க்கையில் திடமான மாற்றத்தை கொண்டு வந்ததே அரசாங்கத்தின் சாதனை. 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கொண்டிருந்த கனவுகளும் தற்போது அவர்கள் கொண்டிருந்த கனவுகளும் வேறுப்பட்டுள்ளன" என்றார்.
பாஜக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பிரதமர், "பாஜகவின் விமர்சகர்களுக்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளில் ஒரு அடிப்படைப் பிரச்னை உள்ளது. அவர்களின் விமர்சனங்கள், இந்திய மக்களின் அறிவுத்திறனை அவமதிப்பது மட்டுமல்லாமல், பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகம் போன்ற மதிப்புகளுக்கான அவர்களின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை குறைத்து மதிப்பிடுகின்றன" என்றார்.