PM Modi: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி - பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி இன்று குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். பல்லடத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி, நேரடியாக ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சென்றார். அங்கு மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்:
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக அமைக்கப்படும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கரில் இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி செல்கிறார். மதுரையில் இருந்து புறப்படும் அவர் காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு செல்கிறார். அங்கு குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அடிக்கல் நாட்டுவது மட்டுமின்றி மற்ற திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 4 ஆயிரத்து 586 கோடி சாலைத்திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நெல்லை செல்லும் பிரதமர்:
பிரதமர் மோடி இன்று மதுரையில் இருப்பதால் அங்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பிறகு பிரதமர் மோடி, திருநெல்வேலி செல்கிறார். ஹெலிகாப்டர் மூலமாக அங்கு செல்லும் பிரதமர் மோடி பாளையங்கோட்டை ஐ.என்.எஸ். பள்ளி வளாகத்தில் தரையிறங்குகிறார். பிரதமர் மோடி திருநெல்வேலிக்கு காலை 11.15 மணிக்கு செல்கிறார்.
பின்னர், அங்கு நடக்கும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் முன்பு பங்கேற்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை, தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென் மாவட்டங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்கு கீழே கொண்டு வரப்பட்டுள்ளது.
5 அடுக்கு பாதுகாப்பு:
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடங்கள் அனைத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் இன்றும், நாளையும் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று தனி விமானம் மூலமாக டெல்லி வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக அங்கிருந்து பல்லடம் சென்றார். அங்கு பொதுமக்கள் முன்பு பிரதமர் மோடி உரையாற்றினார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.