பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் புதிய சகாப்தம்.. மகளிர் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் வகையிலான மசோதாவை நிறைவேற்ற பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவகவுடா தொடங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங் வரையில் பலரின் ஆட்சி காலத்தசில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா:
இறுதியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் நிறைவேற்றினாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், அதை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.
இதை தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அது விரைவில் சட்டமாகிவிடும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லியில் உள்ள பாஜக அலுவகத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
"பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் புதிய சகாப்தம்"
பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டப்பட்டது குறித்து வரும் தலைமுறையினர் விவாதிப்பார்கள். இந்தியாவின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை நான் வாழ்த்துகிறேன். செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ஒரு புதிய வரலாறு படைக்கப்படுவதை நாங்கள் கண்டுள்ளோம்.
இந்த வரலாற்றை உருவாக்க மக்கள் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியது எங்கள் அதிர்ஷ்டம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா சாதாரண சட்டமல்ல, புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கு நான் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றியதற்கான ஆதாரம் தான் இந்த மசோதா தான். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, வளர்ச்சிக்கான திட்டங்களைக் கொண்டு வர பாஜக அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. சில முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்டவை, அத்தகைய ஒரு முடிவுக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம்” என்றார்.
மோடியை தொடர்ந்து பேசிய பாஜக தேசிய தலைவர் நட்டா, "பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் எப்போதும் உறுதியாக உள்ளது. மேலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நம் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணமாகும். இது நீண்ட காலம் நினைவுக் கூரப்படும்” என தெரிவித்தார்.