WHO Traditional Medicine: பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம்: குஜராத்தில் அடிக்கல் நாட்டிய பிரதமர்!
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார மையத்தின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார மையத்தின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் மொரிஷியஸ் பிரதமர் ப்ரவிந்த் குமார் ஜுக்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெர்ராஸ் கேப்ரியேசஸ் அதோனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகிலேயே இத்தகைய மையம் அமைவது இதுவே முதன்முறை. பாரம்பரிய மருந்துகளின் பலன்களை பரவலடையச் செய்யும் வகையில் இந்த சர்வதேச மையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜாம்நகரில் அமையும் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம் அடித்தள அமைப்பாக செயல்படும். இந்தப் புதிய மையம் உலகத்திற்கு பயன்படுவதை நோக்கமாக கொண்டது. உலகளாவிய சுகாதாரத்திற்கு பாரம்பரிய மருந்துகளின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கு ஆதாரம் மற்றும் கற்றல்; தரவுகள் மற்றும் பகுப்பாய்வு; நீடித்தத் தன்மை மற்றும் சமநிலை; புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் என்ற 4 முக்கியமான உத்திகளில் இந்த மையம் கவனம் செலுத்தும்.
உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு குறித்த உச்சிமாநாடு காந்திநகரில் ஏப்ரல் 20 முதல் 22 வரை நடைபெறும். இந்த உச்சிமாநாடு பாரம்பரிய மருந்துத் துறையில் முதலீடுகளை அதிகரிப்பதையும், புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு.சர்பானந்த சோனாவால், இந்தியாவின் ஆயுஷ் தொழில் துறைக்கு ஒரு மைல்கல்லாக இந்த நிகழ்வுகள் இருக்கும் என்றார். காந்தி நகரில் நடைபெறவுள்ள உச்சி மாநாடு ஆயுர்வேதம் மற்றும் மூலிகை பொருட்களுக்கான உலகளாவிய சந்தையை இந்தியாவுக்கு உருவாக்கித் தரும் வாய்ப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் பயணம்..
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக குஜராத் சென்றுள்ளார். அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புதிய பால் பண்ணை ஒன்றை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார். மேலும் உருளை பதப்படுத்தும் ஆலை ஒன்றையும் அவர் தியோதர் மாவட்டத்தில் திறந்து வைத்தார். இது ரூ.600 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நாளை (20 ஆம் தேதி) காந்திநகரில் நடைபெறும் சர்வதேச ஆயுஷ் மாநாட்டில் பிரதமர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
குஜராத் மாநிலம் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததில் இருந்தே பிரதமர் மோடியின் கவனமும் பாஜகவின் கவனமும் குஜராத் மீது குவிந்துள்ளது.