ஆட்டிபடைக்கும் நிதிஷ்.. அள்ளிக்கொடுக்கும் மோடி.. கோடிகளில் புரளும் பீகார்!
பீகாரில் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சுகாதாரம், ரயில்வே, சாலை, இயற்கை எரிவாயு துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் சுமார் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் தந்தது. தொடரந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிட்டவில்லை.
பீகாருக்கு அள்ளிக்கொடுக்கும் மோடி:
பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மத்தியில் பாஜக ஆட்சி நடத்த வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு அதற்கு தேவைப்படுகிறது.
எனவே, இதனை பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமாரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் செய்து கொள்வார்கள் என பேசப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், இடைக்கால பட்ஜெட்டில் இந்த இரண்டு கட்சிகள் ஆளும் பீகாருக்கும் ஆந்திராவுக்கு பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பீகாரில் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சுகாதாரம், ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.
இத்தனை திட்டங்களா?
தர்பங்காவில் ரூ.1260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது ஒரு சிறப்பு மருத்துவமனை / ஆயுஷ் பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, இரவு தங்குமிடம் மற்றும் குடியிருப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். இது பீகார் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு துணை நிலை சுகாதார வசதிகளை வழங்கும்.
சாலை மற்றும் ரயில்வே துறைகளில் புதிய திட்டங்கள் மூலம் இந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்தை மேம்படுத்த திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. பீகாரில் சுமார் ரூ.5,070 கோடி மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
தேசிய நெடுஞ்சாலை 327இ-ல் கல்கலியா - அராரியா நான்கு வழிச்சாலையை அவர் தொடங்கி வைத்தார். இது கிழக்கு - மேற்கு வழித்தடத்தில் (என்.எச்-27) அராரியாவிலிருந்து அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தின் கல்கலியாவுக்கு மாற்று பாதையை ஏற்படுத்தும்.
1740 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் சிரலபோத்து முதல் பாகா பிஷுன்பூர் வரையிலான சோன்நகர் புறவழி ரயில் பாதைக்கு ரூ.220 கோடி மதிப்பில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் ரூ.4,020 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.