சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள்; அதிகாரிகளே தயாராக இருங்கள் - அதிரடியாக உத்தரவிட்ட பிரதமர் மோடி..!
கூட்டத்தில் பேசிய மோடி, "சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க அவசர திட்டத்துடன் தயாராக இருங்கள்" என மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சூடானுக்கான இந்திய தூதர் ரவீந்திர பிரசாத் ஜெய்ஸ்வால் மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்ட பிரதமர் மோடி:
கூட்டத்தில் பேசிய மோடி, "சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க அவசர திட்டத்துடன் தயாராக இருங்கள்" என மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூடானின் சமீபத்திய நிலவரம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். தற்போது சூடான் முழுவதும் சிக்கி தவித்து வரும் 3,000க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, களத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவலை பெற்றுக் கொண்டார்.
கடந்த வாரம், தவறாக சுடப்பட்ட புல்லட் தாக்கி பரிதாபமாக இந்தியர் ஒருவர் உயிரிழந்ததற்கு பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்தார். கவனமாக இருக்கவும், முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை தொடர்ந்து ஆய்வு செய்யவும், அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சூடானின் அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவை பேணுவதன் அவசியம் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இன்று முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுடன் சூடானில் மோசமான நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்:
ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால், அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.
அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி, ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.
சூடான் நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான ரேபிட் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் என்ற குழு இன்று ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது. அந்தக் குழுவானது முதலில் கார்த்தோம் விமான நிலையத்தைக் கைப்பற்றியது. பின்னர் அதிபர் மாளிகையையும் கைப்பற்றியதாக அறிவித்தனர். இதனால் சூடான் முழுவதும் கலவரம் மூண்டுள்ளது.