Karnataka Election Result 2023: "கர்நாடக தேர்தலில் வென்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள்.." - பிரதமர் மோடி..!
கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, காங்கிரஸ் சுமார் 136 தொகுதிகளில் முன்னிலை வகுக்கிறது.
காங்கிரஸ் வெற்றி
அதேபோன்று, பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ”கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்ற பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தனது வாழ்த்துகள் என்றும் கர்நாடக தேர்தலில் தங்களை ஆதரித்தவர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் நன்றி” என்றும் தெரிவித்துள்ளார்.
Congratulations to the Congress Party for their victory in the Karnataka Assembly polls. My best wishes to them in fulfilling people’s aspirations.
— Narendra Modi (@narendramodi) May 13, 2023
மேலும், "இந்த தேர்தலுக்கு பிறகும் பாஜக நிர்வாகிகள் வீரியத்துடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஊழல்:
இதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ”கர்நாடகத்தில் மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.
பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க