![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
PM Modi: பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது.. தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய உரையால் மக்கள் ஆரவாரம்..!
“பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை” என பிரதமர் மோடி பேசியுள்ளார்
![PM Modi: பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது.. தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய உரையால் மக்கள் ஆரவாரம்..! PM Modi Conferred With Highest Award Grand Cross Of The Legion Of Honour By france President Macron PM Modi: பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது.. தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய உரையால் மக்கள் ஆரவாரம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/cfd01b2f6f108c54c0a3224921bc834f1689300377959574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு உயரிய பிரெஞ்சு விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
உயரிய விருது
பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் சிறை தகர்ப்பு தினத்தை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சிறப்பு ராணுவ அணி வகுப்பில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று (ஜூலை.14) நடைபெறும் இந்நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.
இந்தியா - பிரான்ஸ் இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஒப்பந்தங்கள் இந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்’ விருதை வழங்கியுள்ளார்.
இராணுவ / சிவிலியன் கட்டளைகளில் பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதாக இவ்விருது கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இந்த விருது வழங்கும் விழா, பாரிஸ் நகரில் உள்ள எலிசி அரண்மனையில் நடைபெற்ற நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையிலான இரவு விருந்தையும் அளித்தார்.
தமிழ் பற்றி பெருமிதம்
இந்நிலையில், இந்த விருது பற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜூலை 13ஆம் தேதி பிரான்சின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது. இந்த தனித்துவமான மரியாதைக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு இந்திய மக்கள் சார்பாக பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்’ விருது உலகின் முக்கியமான மற்றும் வெகு சில தலைவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, முன்னாள் வேல்ஸ் இளவரசரும் தற்போதைய பிரிட்டன் நாட்டு மன்னருமான சார்லஸ், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்டோர் இந்த விருதைனைப் பெற்றுள்ளனர்.
இச்சூழலில் இன்றைய பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவின் சார்பில் முப்படைகளைச் சேர்ந்த ராணுவக் குழு ஒன்று பங்கேற்க உள்ளது. முன்னதாக பாரிஸ் நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, “பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதைவிட வேறு என்ன பெருமை என்ன இருக்க முடியும்?" எனப் பேசியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)