"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்கி அதை நமது சமூகங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
21ஆவது நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு என்றும் தொழில்நுட்பத்தை மேலும் ஆக்கப்பூர்வமாக்கி சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கசக்ஸ்தான் தலைமை தாங்கி நடத்தி வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு பதிலாக இந்த முறை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அஸ்தானாவில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் உரையை ஜெய்சங்கர் வாசித்தார்.
"பொருளாதார மேம்பாட்டிற்கு வலுவான இணைப்பு தேவைப்படுகிறது"
"21வது நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு ஆகும். நாம் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்கி அதை நமது சமூகங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் AI மிஷன் தொடக்கம் தொடர்பாக தேசிய வியூகத்தை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கோள்ளப்பட்டு வேலைகளில் 'அனைவருக்கும் AI' என்ற நமது அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கு வலுவான இணைப்பு தேவைப்படுகிறது.
அது நமது சமூகங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கைக்கு வழி வகுக்கும். இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடப்பது அவசியம். அதுபோலவே பாரபட்சமற்ற வர்த்தக உரிமைகள் மற்றும் போக்குவரத்து விதிகள் அவசியம். இதுவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் தேவைப்படுகிறது. இந்த அம்சங்களை தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்" என்றார்.
"மக்களை மையப்படுத்திய ஒத்துழைப்பு"
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இந்த பிராந்திய மக்களுடன் ஆழமான நாகரீக உறவுகளை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. மத்திய ஆசியாவின் மையத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அங்கீகரித்து, அவர்களின் நலன்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.
இது அவர்களுடனான அதிக பரிமாற்றங்கள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒத்துழைப்பு என்பது மக்களை மையமாகக் கொண்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கும்போது, தினை உணவு விழா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்பட விழா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சூரஜ்குண்ட் கிராஃப்ட் மேளா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திங்க்-டாங்க் மாநாடு ஆகியவற்றை நடத்தியுள்ளது. பௌத்த பாரம்பரியம் குறித்த சர்வதேச மாநாட்டையும் நடத்தியது. மற்றவர்களின் இதேபோன்ற முயற்சிகளையும் ஆதரிப்போம்" என்றார்.