"இது, அப்துல் கலாமின் புண்ணிய பூமி" ராமேஸ்வரத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பிரதமர் மோடி
2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு மூன்று மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்துவிட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இன்று ராமநாதசுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்ய முடிந்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன். இந்த சிறப்பு வாய்ந்த நாளில், ரூ.8,300 கோடி மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
"பொறியியல் அதிசயம்"
தொடங்கி வைக்கப்பட்ட ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டில் இணைப்பை அதிகரிக்கும். இந்தத் திட்டங்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர சகோதரிகளை நான் வாழ்த்துகிறேன். இது பாரத ரத்னா டாக்டர் கலாமின் புண்ணிய பூமி.
அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன என்பதை அவரது வாழ்க்கை நமக்குக் காட்டியது. அதேபோல், ராமேஸ்வரத்திற்குச் செல்லும் புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு நகரம் 21 ஆம் நூற்றாண்டின் பொறியியல் அதிசயத்தால் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்புக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தப் பாலம் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில்வே கடல் பாலமாகும்.
புதிய ரயில் சேவை ராமேஸ்வரத்திலிருந்து சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தும். இது தமிழ்நாட்டில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா இரண்டிற்கும் பயனளிக்கும். இளைஞர்களுக்கு புதிய வேலைகள் மற்றும் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பிரதமர் மோடி என்ன பேசினார்?
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா அதன் பொருளாதாரத்தின் அளவை இரட்டிப்பாக்கியுள்ளது. இத்தகைய விரைவான வளர்ச்சிக்கு நமது அற்புதமான நவீன உள்கட்டமைப்பும் ஒரு முக்கிய காரணம். கடந்த 10 ஆண்டுகளில், ரயில், சாலை, விமான நிலையங்கள், நீர், துறைமுகங்கள், மின்சாரம், எரிவாயு குழாய் இணைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளோம்.
இன்று, நாடு முழுவதும் பெரிய கட்டுமானத் திட்டங்கள் நடந்து வருகின்றன. வடக்கில் ஜம்மு-காஷ்மீரில், உலகின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான செனாப் பாலத்தின் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. மேற்கில், மும்பையில், இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேது கட்டப்பட்டுள்ளது. கிழக்கில், அசாமில், போகிபீல் பாலத்தைக் காணலாம். தெற்கில், உலகின் சில செங்குத்து தூக்கு பாலங்களில் ஒன்றான பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது.
வளர்ந்த இந்தியா அல்லது விசித் பாரதத்தை நோக்கிய பயணத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. தமிழ்நாட்டின் ஆற்றல் உணரப்படும்போது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படும் என்று நான் நம்புகிறேன்.
கடந்த பத்தாண்டுகளில், 2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு மூன்று மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மோடி அரசு தமிழ்நாட்டிற்கு மூன்று மடங்கு நிதியை வழங்கியுள்ளது. இந்த ஆதரவு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது" என்றார்.





















