Gujarat Election: ராகுல் காந்தியை குஜராத் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.. பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி கடும் விமர்சனம்..
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் நர்மதா பச்சாவோ அந்தோலன் ஆர்வலர் மேதா பட்கர் பங்கேற்றது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் காங்கிரஸை விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவை உடைக்க விரும்பும் கூறுகளை ஆதரிப்பவர்களுக்கு உதவ குஜராத் மக்கள் தயாராக இல்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் நர்மதா பச்சாவோ அந்தோலன் ஆர்வலர் மேதா பட்கர் பங்கேற்றது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் காங்கிரஸை விமர்சனம் செய்துள்ளார், நம்பிக்கையை மீண்டும் பெற எதிர்க்கட்சி தனது "பிறித்தாளும்" வியூகத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாவ்நகர் மாவட்டம் பாலிதானா நகரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, குஜராத் மக்கள் காங்கிரஸை நிராகரித்துள்ளனர், ஏனெனில் காங்கிரஸ் ஆட்சியின் போது பல பிரச்சனைகளை சந்தித்துள்ளனர், மேலும் ஒரு பகுதி மக்களை வேறு பகுதி மக்களுக்கு எதிராக தூண்டிவிடுவது போன்ற கட்சியின் கொள்கையால் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இதற்கு முன் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது கூட ராகுல் காந்தியின் யாத்திரையில் மேதா பட்கர் கலந்துக்கொண்டது தொடர்பாக விமர்சனம் செய்தார். குஜராத்தின் நம்பிக்கையை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து காங்கிரஸுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8- ஆம் தேதி எண்ணப்படுகிறது.
டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதியை அறிவித்தார்.
தேர்தல் ஏற்பாடுகள்:
மாநிலத்தில் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் 4.90 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 33 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாக இளைஞர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
மாநிலத்தில் 1,274 வாக்குச்சாவடி மையங்கள் பெண் அலுவலர்களால் நிர்வகிக்கப்பட உள்ளது. குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்றைய தினம் பிரச்சாரத்தின் போது வறண்டு கிடக்கும் சவுராஷ்டிரா பகுதிக்கு நர்மதா நீர் செல்வதை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். 40 ஆண்டுகளாக சர்தார் சரோவர் அணைத் திட்டத்தை முடக்குவதற்கு காரணமான ஒருவருடன் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
மேலும் எதிர்கட்சியை குறிவைத்து பேசிய பிரதமர், "காங்கிரஸின் சித்தாந்தம் பிரித்தாள்வது. குஜராத் தனி மாநிலம் ஆவதற்கு முன், குஜராத்திகளையும் மராத்தியர்களையும் ஒருவரையொருவர் சண்டையிட வைத்தது (காங்கிரஸ்) பின்னர் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களை காங்கிரஸ் ஒருவருக்கொருவர் எதிராக தூண்டியது. காங்கிரஸின் இத்தகைய கொள்கையால் குஜராத் மிகவும் பாதிக்கப்பட்டது.
குஜராத்தின் மக்கள், காங்கிரஸின் இந்த உத்தியைப் புரிந்துகொண்டு, இதுபோன்ற “பிளவுபடுத்தும் சக்திகளுக்கு” கதவைக் அடைக்க ஒன்றிணைந்தனர் என்று பிரதமர் கூறினார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறியது, கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
"குஜராத் மக்கள் ஒற்றுமையாக இருந்ததால் காங்கிரஸ் தோல்வியடைந்தது. குஜராத் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு சாதிவாதம், வகுப்புவாதம், வாக்கு வங்கி அரசியல் மற்றும் பிறித்தாளும் சித்தாந்தம் ஆகியவற்றை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இந்தியாவை உடைக்க விரும்பும் கூறுகளை ஆதரிப்பவர்களுக்கு குஜராத் மக்கள் ஒரு போதும் உதவ மாட்டார்கள்” என்று பிரதமர் கூறினார்.