Video : ஹெலிபேடில் பிளாஸ்டிக் குப்பைகள்… முன்னாள் முதல்வர் எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க திணறிய காட்சி
ஹெலிகாப்டர் தரை இறக்க முயற்சித்தபோது அதிலிருந்து வீசும் காற்று காரணமாக அருகில் இருந்த குப்பைகள் காற்றில் பறக்க ஆரம்பித்து, தூசியுடன் மேலே எழும்ப ஆரம்பித்தன.
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர், கல்புர்கியில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் கழிவுகளால் திங்கள்கிழமை தரையிறங்குவதில் சிரமத்தை எதிர்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ் எடியூரப்பா
கர்நாடகாவிற்கு நான்குமுறை முதல்வராக பதவி வகித்த அவர் கர்நாடக அரசியலில் முக்கிய பங்கு வகித்த ஒருவர் ஆவார். மேலும் பாஜக-வின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான இவருக்கு இப்படி பாதுகாப்பு குறைபாடு நேர்ந்தது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இவர் தற்போது அரசியலில் இருந்து விலகி இருந்தாலும் முன்னாள் முதல்வர் என்ற முறையில் தக்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கருத்துகள் கூறப்படுகின்றன. இவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க திணறும் வீடியோ ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தரையிறங்க திணறிய ஹெலிகாப்டர்
ஹெலிபேட் அருகே ஹெலிகாப்டர் வருவதையும், தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக தரையில் பிளாஸ்டிக் பைகள் பரப்பதையும் கண்ட பைலட் தரையிறங்குவதை நிறுத்தி மீண்டும் ஹெலிகாப்டரை பறக்க செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. ஹெலிகாப்டர் தரை இறங்க முயற்சித்தபோது அதிலிருந்து வீசும் காற்று காரணமாக அருகில் இருந்த குப்பைகள் காற்றில் பறக்க ஆரம்பித்து, தூசியுடன் மேலே எழும்ப ஆரம்பித்தன. இதனால் தரையிரங்கும் இடம் தெளிவாக தெரியாததாலும், ஹெலிகாப்டர் ஃபேனில் குப்பைகள் சிக்கினால் ஆபத்து நேரும் என்றும், பைலட் ஹெலிகாப்டரை மீண்டும் பறக்கச்செய்தார்.
சுத்தம் செய்யும்வரை மேலே பறந்தது
அதிகாரிகள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் வரை ஹெலிகாப்டர் அப்பகுதியில் மேலே சுற்றிக்கொண்டே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. பின்னர் ஹெலிபேடில் பிளாஸ்டிக் அகற்றப்பட்டு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. ஹெலிபேட் அருகே ஹெலிகாப்டர் வந்தபோது பிளாஸ்டிக் கழிவுகள் பறப்பதை வீடியோவில் காண முடிந்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகி பலரை பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.
#WATCH | Kalaburagi | A helicopter, carrying former Karnataka CM and senior leader BS Yediyurappa, faced difficulty in landing after the helipad ground filled with plastic sheets and waste around. pic.twitter.com/BJTAMT1lpr
— ANI (@ANI) March 6, 2023
பாதுகாப்பில் ஏன் குளறுபடி?
ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான அனுமதியின்படி மாவட்ட காவல்துறையின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் இஷா பந்த் தெரிவித்தார். தரையிறங்குவதற்கான அனுமதி பொதுப்பணித் துறையிடமிருந்து எடுக்கப்பட்டது, மேலும் மாவட்ட காவல்துறை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டுமே வழங்கியதாக அதிகாரி கூறினார்.