Pegasus Spyware : என்எஸ்ஓ நிறுவனத்திடம் எந்த வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை- பாதுகாப்பு அமைச்சர் பதில்
பெகசஸ் உளவு செயலி அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக இஸ்ரேல் அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது
பெகசஸ் உளவு பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஒ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மாநிலங்களவையில் பதில் அளித்துள்ளது.
இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என 300க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் பெகசஸ் உளவுச் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்லாம் என 'pegasus Project" தெரிவித்தது.
பெகசஸ் உளவு செயலி அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக இஸ்ரேல் அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது. அந்த செயலி இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது என்று 2019 ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, இந்த செயலியை இந்திய அரசு வாங்கியதா? இல்லையா? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பின் வந்தனர்.
பாதுகாப்பு அமைச்சகம் வாங்கவில்லை. சரி! இந்திய அரசின் வேறு எந்த அமைச்சகம் வாங்கியது? #பெகாசஸ் https://t.co/hCqnyygYCF
— Dr Ravikumar M P (@WriterRavikumar) August 9, 2021
பாதுகாப்பு அமைச்சகம் நிதிஒதுக்கீடு குறித்த கேள்வி:
கேரளா மாநில எம்.பி சிவதாசன் மத்திய பாதுக்காப்பு அமைச்சகத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்தும், பாதுகாப்பு துறையில் வெளிநாட்டு கொள்முதல் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சகம், " 2020-21 பட்ஜெட்டில், பட்ஜெட் மதிப்பீடு ரூ.4,71,378.00 கோடி. இது 2019-18 பட்ஜெட் மதிப்பீட்டைவிட 15.49% கூடுதலாகும். 2020-21 நிதியாண்டில், வெளிநாட்டு கொள்முதலுக்கு ரூ.53,118.59 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பெகசஸ் நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் எந்த வர்த்தகத்தையும் மேற்கொள்ளவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. பெகசஸ் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, இருஅவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.
பெகசஸ் மென்பொருள் தொழில் நுட்பத்தை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தன. விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பெகசஸ் விவாகரம் தொடர்பான விவாதத்தை மத்திய அரசு புறக்கணித்து வந்தது.
முன்னதாக, பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைப்பேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் அறிக்கையை சமர்பித்தார். ஆனால், பெகசஸ் பென்போருளை இந்திய அரசு வாங்கவில்லை என்று உறுதிப்பட தெரிவிக்கவில்லை.
மக்களவையில் அளித்த பதிலில், " தேசிய பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பின் காரணமாக, மத்திய மற்றும் மாநில முகமைகளால் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கு நன்கு நிறுவப்பட்ட முறை இந்தியாவில் உள்ளது. இந்திய தந்தி சட்டம், 1885-ன் பிரிவு 5(2) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2020-ன் 69-ம் பிரிவின் கீழ் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கான வேண்டுகோள்கள் வைக்கப்பட வேண்டும். பட்டியலில் உள்ள எண்கள் வேவுபார்க்கப்பட்டனவா என்பது கூற இயலாது என்று செய்தியை வெளியிட்டவர் கூறுகிறார்.
வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. சட்டப்பூர்வமில்லா வேவுபார்த்தல் நடைபெறாமல் இருப்பதை நமது நாட்டின் நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் உறுதி செய்கின்றன. எனவே, இந்த விஷயத்தை தர்க்க கண்ணோட்டத்தோடு நாம் அணுகினால், இந்த பரபரப்பில் உண்மை இல்லை என்பது நன்கு புலப்படும்' என்று தெரிவித்தார்.
நாடளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 13-ம் தேதியோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.