Parliament: மத்திய அரசுடனான மோதல் முடிவுக்கு வருகிறதா? மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்குகிறதா எதிர்க்கட்சிகள்? நடந்தது என்ன?
வழக்கமான அவை நடவடிக்கைகளை நடத்த முடியாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரும் திணறி வருகின்றனர்.
மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் மணிப்பூர் பக்கம் திரும்பியுள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முடங்கி போனது.
முடங்கி போன நாடாளுமன்றம்:
நாடாளுமன்ற விதி 267-இன் கீழ் மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. அதேபோல, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால், விதி எண் 176இன் கீழ் குறுகிய கால விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்துள்ளது.
இதன் காரணமாக, நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கி போனது. வழக்கமான அவை நடவடிக்கைகளை நடத்த முடியாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரும் திணறி வருகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பதிலளிக்க வைக்க எதிர்க்கட்சி (இந்தியா) கூட்டணி சார்பில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.
இதன் மீதான விவாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கும் என்றும் பிரதமர் மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் அமளி தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக விவாதம் எதுவும் இன்றி பல்வேறு முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
எதிர்கட்சிகள் வழங்கிய யோசனை:
இந்த நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளும் வகையில் இந்தியா கூட்டணி சார்பில் அரசுக்கு ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மணிப்பூர் தொடர்பாக மாநிலங்களவையில் எந்த வித தடையும் இன்றி விவாதம் நடத்த இரண்டு தரப்பினரும் (ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி) ஏற்று கொள்ளும் வகையில் அவை தலைவருக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு யோசனை வழங்கப்பட்டுள்ளது. இதை மோடி அரசு ஏற்று கொள்ளும் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
நடக்கப்போவது என்ன?
எதிர்க்கட்சிகள் வழங்கிய யோசனை குறித்து விரிவாக பேசிய எதிர்க்கட்சி எம்பி ஒருவர், "விதி எண் 167இன் கீழ் வாக்கெடுப்பு நடத்த வழிவகை இருக்கிறது. எனவே, இதன் கீழ் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. விதி 176ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என அரசு விரும்பியது. விதி 267இன் கீழ் நாங்கள் விவாதிக்க விரும்பினோம். 167 இன் கீழ் விவாதம் நடத்த ஒப்பு கொண்டால், அனைவரும் ஏற்று கொள்ளும் வகையில் தீர்வு கிடைக்கும்" என்றார்.
இரு அவைகளிலும் மணிப்பூர் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கியுள்ளதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.