Pahalgam Terrorist: பஹல்காம் தீவிரவாதிகள் எங்கே? இருப்பிடம் தெரிந்தது - தப்பிப்பது எப்படி? கைகளில் இருப்பது என்ன?
Pahalgam Terrorist Location: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பதுங்கி இருக்கும் இடம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Pahalgam Terrorist Location: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் அத்தியாவசிய பொருட்கள் கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கே?
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் 25 பேர் உட்பட 26 பேர், தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்டு மிராண்டித்தனம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அதேநேரம், கொடூரமான துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய அந்த 4 தீவிரவாதிகளை தேடும் பணி தற்போதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் உள்ளது. ஆனாலும், அவர்கள் இதுவரை பிடிபடவில்லை. இந்நிலையில் தான், அவர்கள் தெற்கு காஷ்மீர் வனப்பகுதிகளில் தான் இன்னும் மறைந்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகள் சிக்காதது ஏன்?
தாக்குதலை நடத்திய பிறகு தலைமறைவான அந்த தீவிரவாதிகளை தேடும் பணிகளை ராணுவம் முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் இதுவரை பிடிபடவில்லை. காரணம் அவர்கள் தங்களையே முழுமையாக சார்ந்து இருப்பதாகவும், வெளியுலக உதவியை எதிர்பார்க்காததும் காரணம் என கூறப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமையில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, ”தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை தாங்களே எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாகவே அடர்ந்த காடுகளில் பதுங்கி இதுவரை தேடுதல் வேட்டையின் போது சிக்கவில்லை. அதாவது அத்தியவசிய தேவைகளுக்கு கூட பாகிஸ்தான் ராணுவம் போன்ற வெளியுலகின் உதவி எதையும் நாடாமல் அவர்கள் பதுங்கி உள்ளனர்” என கூறப்படுகிறது.
ஹைடெக் தொலைதொடர்பு சாதனம்
தலைமறைவாக உள்ள தீவிரவாதிகள் வசம் மேம்பட்ட தொலைதொடர்பு உபகரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது, அவற்றிற்கு சிம் கார்ட்கள் தேவைப்படாது என்றும், குறைந்த தூரத்திற்கு எந்தவித இடைஞ்சலும் இன்றி பாதுகாப்பாக தொடர்புகொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவற்றை பின் தொடர்ந்து தீவிரவாதிகளை பிடிப்பதும் கடினம் என முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
பஹல்காமை தேர்வு செய்தது ஏன்?
கடந்த 2019ம் ஆண்டு புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, இந்திய மண்ணில் நடந்த மிக மோசமான தீவிரவாத தாக்குதல் இதுவாகும். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவிரவாதிகள் அந்த இடத்தில் முகாமிட்டதும் தெரிய வந்துள்ளது. அரு மற்றும் பீதாப் வாலே உள்ளிட்ட 4 இடங்களை தீவிரவாதிகள் பரிசீலித்ததாகவும், அங்கு பாதுகாப்பு மிகவும் தீவிரமாக இருந்ததால் இறுதியில் பஹல்காமை அவர்கள் தேர்வு செய்ததாகவும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று தீவிரவாதிகள் காட்டில் இருந்து வெளியே வந்து சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஒருவர் மட்டும் தேவைப்பட்டால் உதவலாம் என காட்டுக்குள்ளேயே மறைந்து இருந்ததாகவும் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. அவர்களுக்கு உதவ மேலும் சிலரும் இருந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.





















