Supreme Court : வெறும் வயிற்றில் யாரும் உறங்கக்கூடாது என்பதுதான் நமது கலாச்சாரம்.. உச்சநீதிமன்றம் காட்டம்
வெறும் வயிற்றில் யாரும் உறங்கக்கூடாது என்பது தான் நமது கலாச்சாரம் என, புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொண்ட மோசமான சூழல் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சமூக ஆர்வலர்களான அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர் மற்றும் ஜக்தீப் சோக்கர் ஆகியோர் சார்பில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.
அரசு தரப்புக்கு எதிராக வாதம்:
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்தாவிட்டால் தகுதியான மற்றும் உதவி தேவைப்படும் பயனாளிகளுக்கான உரிமைகள் பறிக்கப்படும். சமீபத்திய ஆண்டுகளில் மக்களின் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் கூறினாலும், உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா வேகமாக சரிந்துள்ளது என்றும் பூஷன் வாதாடினார்.
மத்திய அரசு தரப்பு விளக்கம்:
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 81.35 கோடி பயனாளர்கள் உள்ளனர். பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டிற்கும் கூட இது பெரிய எண்ணிக்கை தான். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, புதிய பயனாளிகளின் சேர்க்கையை தடுக்கவில்லை என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட பூஷன், 14 மாநிலங்கள் தங்கள் உணவு தானியங்களின் ஒதுக்கீடு தீர்ந்துவிட்டதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார்.
நீதிபதிகள் கருத்து:
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், யாரும் வெறும் வயிற்றில் உறங்கக் கூடாது என்பது நமது கலாச்சாரம் என்றும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் நாட்டின் கடைசி மனிதனுக்கும் சென்றடைவதைப் கண்காணிக்குமறும் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு தானியங்கள் கடைசி மனிதனை சென்றடைவதை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று நாங்கள் கூறவில்லை, இந்திய ஒன்றியம் கொரோனா காலத்தில் மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், தற்போதும் அது தொடர்வதை காண வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு:
தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு பலன்களை வழங்க உதவும், eSHRAM இணைய முகவரியில் பதிவு செய்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையுடன், புதிய விளக்கப்படத்தை சமர்ப்பிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.