Equal Coparcenary Rights : மகன்களைபோல மகள்களுக்கும் சொத்தில் உரிமை உள்ளதா? உயர்நீதிமன்றம் அதிரடி..
பிறப்புரிமையின் அடிப்படையில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம், கடந்த 2020ஆம் ஆண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
பல காலமாக, பெண்களுக்கு சொத்தில் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. ஆனால், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாகவும் அதன் பின் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாகவும் தற்போது பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
வாரிசு உரிமைச் சட்டம்:
பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வழிசெய்யும் முதல் முயற்சியாக, கடந்த 1956ஆம் ஆண்டு வாரிசு உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும், பரம்பரைச் சொத்து மற்றும் கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்கள் உரிமை கோர முடியாத நிலை இருந்தது. பின்னர், 1989ஆம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரம்பரைச் சொத்துகளில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.
ஆனால், இந்தச் சட்டத்தின்படி உரிமை பெற 1989ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் தேதிக்கு முன்னர் திருமணம் நடக்காதவராக இருக்க வேண்டும். பிறகு 2005ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என திருத்தம் செய்யப்பட்டது.
பாலின சமத்துவத்திற்கு பின்னடைவை தந்த நீதிமன்ற தீர்ப்பு:
இதற்கிடையே, கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு வழக்கில் தந்தை உயிரோடு இருந்தால் மட்டுமே மகள்கள் சொத்து பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது, பாலின சமத்துவத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டுக்கு முன்னதாக சொத்தின் உரிமையாளர் இறந்திருந்தாலும், பிறப்புரிமையின் அடிப்படையில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம், கடந்த 2020ஆம் ஆண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
ஒடிசா உயர் நீதிமன்றம் அதிரடி:
இந்த நிலையில், இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி, தந்தை எப்போது இறந்திருந்தாலும், பரம்பரைச் சொத்தில் மகன்களை போல மகள்களுக்கும் உரிமை உண்டு என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது ஒடிசா உயர் நீதிமன்றம். நீதிபதிகள் பித்யுத் ரஞ்சன் சாரங்கி, முரஹரி ஸ்ரீ ராமன் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
ஒடிசா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "மிதக்சாரா சட்டத்தின் கீழ் வரும் கூட்டு குடும்பத்தில் கூட, மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, மகன்களை போல மகள்களுக்கும் சொத்தில் உரிமை இருக்கிறது. ஒரு மகனாக இருந்திருந்தால் எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ, அதே உரிமைகள் மகள்களுக்கு பரம்பரை சொத்தில் உரிமை உள்ளது. கூட்டுக் குடும்பச் சொத்தில் தன் பங்கை கேட்க மகளுக்கு உரிமை உண்டு. ஒரு மகனைப் போலவே மகளுக்கு அதே பொறுப்புகள் மற்றும் உரிமைகள் உள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரரின் தந்தை கடந்த 2005ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி உயிரிழந்தார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு, மனுதாரரின் மூன்று சகோதரர்கள் ஒடிசா நிலச் சீர்திருத்தத்தின் பிரிவு 19(1)(c) இன் கீழ் அவரது சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றினர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.