One Nation One Election: ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டுமா? வேண்டாமா? பொதுமக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 15ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 15ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை அனுப்பலாம். இந்த பரிந்துரைகளை onoe.gov.in அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்:
மிகவும் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தல் இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.
நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயவும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு, உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எவ்வளவு செலவாகும்..?
மக்களவை முதல் பஞ்சாயத்து தேர்தல் வரை, நாட்டின் மூன்று அடுக்குகளிலும் தேர்தல் நடத்த, மொத்தம், 10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் அல்லது ஒரு வாரத்திற்குள் நடத்தப்பட்டால், அதன் செலவு ரூ.3 முதல் 5 லட்சம் கோடி வரை குறையும் என்றும் கூறப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலுக்கு எவ்வளவு லட்சம் கோடி செலவாகும்..?
பொதுக் கொள்கைகளின் ஆராய்ச்சி அடிப்படையிலான ஆய்வாளரான என் பாஸ்கர் ராவ் கருத்துப்படி, 2024 மக்களவைத் தேர்தலில் ரூ.1.20 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து சட்டசபை தேர்தலையும் ஒன்றாக நடத்தினால், 3 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது.
சட்டப் பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை (பஞ்சாயத்து, மாவட்டப் பஞ்சாயத்து, நகராட்சி) தனித்தனியாக நடத்த ரூ.10 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 4500 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த ரூ.3 லட்சம் கோடி. அதே நேரத்தில், அனைத்து மாநகராட்சித் தேர்தல்களையும் நடத்த ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்தம் 4500 சட்டமன்ற தொகுதிகளும், 500 மாநகராட்சி இடங்கள் உள்ளன. இதேபோல், அனைத்து மாவட்டப் பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து என அனைத்து தேர்தல்களையும் நடத்த ரூ.4.30 லட்சம் கோடி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 650 மாவட்டப் பஞ்சாயத்து இடங்கள், 7000 உள்ளாட்சி இடங்கள் மற்றும் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்து இடங்கள் உள்ளன.
அனைத்து தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதன் மூலம் பயணம், ஊடகப் பிரச்சாரம், பூத் அளவிலான பணிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவுகளைக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளும் நாடுமுழுவதும் செயல்படுத்துவது கடினம் என்று கூறப்படுகிறது.