Odisha train accident: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்த அமைச்சர் உதயநிதி அடங்கிய தமிழ்நாடு குழு..!
மீட்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ் .எஸ். சிவசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் கொண்ட தமிழ்நாடு குழு ஒடிசா சென்றது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான ரயில் விபத்தாக ஒடிசா ரயில் விபத்து பார்க்கப்படுகிறது. மூன்று ரயில்கள் மோதி கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே துயரத்தில் ஆழத்தியுள்ளது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியதால், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் அதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை:
ஆனால், தற்போது வரை, தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தில் இன்னும் 12 பேர் அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா முதலமைச்சரை சந்தித்த தமிழ்நாடு குழு:
மீட்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ் .எஸ். சிவசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் கொண்ட தமிழ்நாடு குழு ஒடிசா சென்றது. தற்போது, அந்தக் குழு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி கிளம்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10 முதல் 12 பெட்டிகள் வரை தடம் புரண்ட நிலையில், எதிர் தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற மற்றொரு ரயிலும், தொடர்ந்து அதே பாதையில் சென்ற சரக்கு ரயிலும் தடம் புரண்ட பெட்டிகளுடன் அடுத்தடுத்து மோதின.
எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்..?
நாட்டையே உலுக்கியுள்ள இந்த ரயில் விபத்தில், இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்த சம்பவத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.