Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்து.. சிக்கிய மூன்று அதிகாரிகள்.. சிபிஐ குற்றப்பத்திரிகையில் பகீர்
இந்திய வரலாற்றின் மோசமான விபத்தாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஆகியவை விபத்துக்குள்ளானது.
உலகை சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா ரயில் விபத்து:
இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வந்த நிலையில், சிபிஐ அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் மூன்று அதிகாரிகளை சிபிஐ சமீபத்தில் கைது செய்தது. இந்த விபத்துக்கு சதி செயல் ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ரயில் சிக்னல் பிரிவின் பொறுப்பாளரும் மூத்த பொறியாளருமான அருண் குமார் மஹந்தா, சிக்னல் பிரிவின் மூத்த பொறியாளர் அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பப்பு குமார் யாதவ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை:
இதுகுறித்து மூத்த அதிகாரி பேசுகையில், "இந்திய தண்டனை சட்டப் பிரிவு 304 (மரணத்தை உண்டாக்கும் நோக்கில் செயல்பட்டது), 201 (ஆதாரங்களை அழித்தது, தவறான தகவல்களை அளித்தது), ரயில்வே சட்டப் பிரிவு 153 (ரயிலில் பயணிக்கும் நபர்களின் பாதுகாப்பிற்கு வேண்டுமென்றே ஆபத்தை விளைவிப்பது) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதுகுறித்து மூத்த சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "மூவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்றார்.
முன்னதாக, பாலசோர் காவல் நிலையத்தில் ரயில்வே காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 304A (அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தது), 337 (அலட்சியமான செயலால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது), 338 (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
பின்னர் மூவருக்கும் எதிரான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 304 இன் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் கீழ் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். விசாரணையில், விபத்து நடந்த இடத்தை தடயவியல் நிபுணர்களுடன் சிபிஐ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. சிபிஐ அதிகாரிகள், ரயில்வே துறையிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளையும் சேகரித்துள்ளனர்.