Summer Holiday : கொளுத்தியெடுக்கும் வெயில்...பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவித்த ஒடிசா அரசு...!
கோடை வெயில் காரணமாக ஒடிசாவில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Summer Holiday : கோடை வெயில் காரணமாக ஒடிசாவில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவானதால் வெப்ப அலை நாட்டை உலுக்கி வருகிறது. குறிப்பாக, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்கள் வெப்ப அலையின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
வெப்ப அலை
அடுத்த சில நாள்களுக்கு மேல்குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, பிகார் பாட்னாவில் அமைந்துள்ள பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில், வெப்பத்தின் அளவு இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவாகி வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ஒடிசாவில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, வாரணாசியில் 24.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
முன்கூட்டியே விடுமுறை
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நிலவும் வெப்பச் சலனத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நாளை (ஏப்ரல் 21ஆம் தேதி) தொடங்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசாவில் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவு பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி கோடை விடுமுறையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
அறிவுறுத்தல்
இதற்கிடையில், கடும் வெப்பம் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, முதியவர்கள் மற்றும் சிறார்களை வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெளியே செல்லும் போது தலையை மறைக்க வேண்டும் அல்லது குடை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடலில் பிடிப்புகள் ஏதேனும் இருந்தாலோ, சுவாசிப்பதில் சிரமம் இருந்தாலோ மருத்துவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தெருக்களில் விற்கப்படும் மற்றும் மூடாமல் வைக்கப்படும் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க