சைபர் குற்றவாளிகளால் பணத்தை இழந்த பெண்.. முத்தலாக் கூறி விவாகரத்தை அறிவித்த கணவன்.. நடந்தது என்ன?
அந்த பெண் தனது புகாரில் "வரதட்சணை தொடர்பான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக" கூறியுள்ளதாக, அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இணைய மோசடியில் ஈடுபட்டு பணத்தை இழந்த தனது மனைவிக்கு முத்தலாக் வழங்கியதாகக் கூறப்படும் ஒரு நபர் மீது ஒடிசா காவல்துறை சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
பணத்தை இழந்த மனைவிக்கு முத்தலாக்
காவல்துறையின் கூற்றுப்படி, ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஏப்ரல் 1-ஆம் தேதி புகார் ஒன்றினை அளித்துள்ளார். சைபர் குற்றவாளிகளிடம் ₹1.5 லட்சத்தை இழந்த அவர் அதனை அவரது கணவரிடம் ஒப்புக்கொண்டதை அடுத்து, முத்தலாக் கூறி தனது கணவர் தன்னை சட்டவிரோதமாக விவாகரத்து செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண் தனது புகாரில் "வரதட்சணை தொடர்பான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக" கூறியதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்குப்பதிவு
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் மற்றும் ஐபிசி மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கேந்திரபாரா சதர் காவல் நிலைய ஆய்வாளர் சரோஜ் குமார் சாஹூ தெரிவித்தார். மிர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும், குற்றவாளி தற்போது குஜராத்தில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஏமாற்றிய சைபர் குற்றவாளிகள்
மேலும் அவர் மூன்று பதின்ம வயது குழந்தைகளின் தாயார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. பிப்ரவரி 16 அன்று அவர் சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டார் என்று தெரியவருகிறது. தற்போது குஜராத்தில் வசிக்கும் அவரது கணவரிடம், ஏப்ரல் 1-ஆம் தேதி மொபைல் உரையாடலின்போது இந்த விஷயத்தை அவர் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த குற்றவாளி, உடனடியாக "தலாக், தலாக், தலாக்" என உச்சரித்து, திருமண வாழ்வில் இருந்து உடனடியாக பிரிந்து செல்வதாக கூறியதாக அந்த பெண் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம்
2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய உடனடி விவாகரத்து முறையான முத்தலாக்-ஐ தடை செய்தது. முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் உடனடி ‘முத்தலாக்’ நடைமுறையை தடை செய்துள்ளது. மேலும் அவ்வாறு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை வழங்க சட்டம் வழி வகுக்கிறது. புனித குர்ஆனின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது மற்றும் இஸ்லாமிய சட்டமான ஷரியத்தை மீறியது உட்பட பல காரணங்களுக்காக அதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் கூற்றுப்படி, சட்டத்தை மீறி முத்தலாக் முறை பின்பற்றப்பட்டால், அதில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது