டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு- 10 ஏக்கரில் புதிய உடல் தகன இடம்
டெல்லியில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில் வடக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் 10 ஏக்கரில் புதிய உடல் தகன இடத்தை அளித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு தொற்று பாதிப்புடன் உயிரிழப்பும் வேகமாக அதிகாரித்து வருகிறது. குறிப்பாக அங்கு ஒருநாளைக்கு 350 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் உடல்களை அடக்கம் செய்ய டோக்கன் வாங்கி காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வடக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் 10 ஏக்கரில் புதிய உடல் தகன இடத்தை அளித்துள்ளது. அதன்படி மங்கோல்புரி பகுதியில் 5 ஏக்கரில் இந்துக்களுக்கும், 3 ஏக்கரில் இஸ்லாமியர்களுக்கும், 2 ஏக்கரில் கிறிஸ்தவர்களுக்கும் புதிய தகன இடங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஏற்கெனவே டெல்லியின் சரே காலா கான் பகுதியிலுள்ள உடல் தகன இடம் போதாதால் அங்கு உள்ள பூங்காவிலும் உடல்களை தகனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது வடக்கு டெல்லியிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் அங்கும் புதிய உடல் தகன இடம் அமைக்கப்பட உள்ளது.
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழலில் அங்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவையும் மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது டெல்லிக்கு வழங்கப்பட்டு வந்த 105 மெட்ரிக் டன் ஆக்சிஜனை 80 மெட்ரிக் டன்னாக குறைத்துள்ளது. மீதமுள்ள ஆக்சிஜன் உத்தரப்பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி அரசு மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது. கடந்த ஒரு வாரம் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனை இந்த வாரமும் நீட்டித்து டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக டெல்லியில் இருக்கும் சூழல் குறித்து டெல்லி உயர்நீதிமன்றமும் தனது அதிருப்தியை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது. அத்துடன் டெல்லியில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.