No Confidence Motion: தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகுமா? நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தப்பிக்குமா மோடி அரசு? நடக்கப்போவது என்ன?
அரசின் மீது நம்பிக்கை இழந்ததை வெளிப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் ஆயுதம்தான் நம்பிக்கையில்லா தீர்மானம்.
புதிதாக உருவாகியுள்ள இந்தியா (எதிர்க்கட்சிகள்) கூட்டணி, தெலங்கானாவை ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆகியவை மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்துள்ளன. 125க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்படுவதற்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் வீடுகளை விட்டு சொந்த ஊர்களில் இருந்து வெளியேறுவதற்கும் காரணமாக இருக்கும் மணிப்பூர் இனக்கலவரத்தால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்துள்ளது.
மணிப்பூரில் நடக்கும் கொடூர சம்பவங்கள் நாளுக்கு நாள் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் மத்திய அரசும் மாநில அரசும் திணறி வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால தொடரில் தொடர் அமளி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததன் மூலம் மணிப்பூர் குறித்து பதில் அளிக்கும் நிலைக்கு பிரதமர் மோடி தள்ளப்படுவார் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
நாடாளுமன்றத்தில் அசுர பலத்தில் உள்ள பாஜக:
மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 272 ஆகும். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசுக்கு 331 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. பாஜகவுக்கு மட்டும் 303 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணிக்கு 144 உறுப்பினர்கள் உள்ளனர்.
இரண்டு கூட்டணியிலும் அங்கம் வகிக்காத கே.சி.ஆரின் பி.ஆர்.எஸ், ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி., நவீன் பட்நாயக்கின் பி.ஜே.டி உள்ளிட்ட கட்சிகளுக்கு 70 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன?
அரசின் மீது நம்பிக்கை இழந்ததை வெளிப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் ஆயுதம்தான் நம்பிக்கையில்லா தீர்மானம். அப்போது, நம்பிக்கையை தக்கவைக்க நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை இழக்கும் பட்சத்தில் உடனடியாக ஆட்சி கவிழும். மக்களவையில் பெரும்பான்மை இருக்கும் வரை அரசால் ஆட்சியை நடத்த முடியும்.
எதிர்க்கட்சிகளின் ஆயுதம்:
ஆளுங்கட்சியை நோக்கி கேள்வி எழுப்பவும், அவர்களின் தோல்விகளை சுட்டிக்காட்டவும், இது தொடர்பாக விவாதிக்கவும் நம்பிக்கையில்லா தீர்மானம் பயன்படுகிறது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் நம்பிக்கையில்லா தீர்மானம் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. அதேபோல, நாடாளுமன்றத்தில் உள்ள எந்த கட்சி வேண்டுமானாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்ட வர முடியும். ஆனால், அதற்கு 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதுவும் மக்களவையில் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியும். மாநிலங்களவையில் கொண்ட வர முடியாது.