Disconnect Bill: அலுவலக நேரம்.. வேலை முடிஞ்சா நீ யாரோ? நான் யாரோ? ஊழியர்களுக்கான மசோதா சட்டமாகுமா?
Disconnect Rights Bill: பணி நேரத்திற்குப் பிறகு அலுவலக வேலை தொடர்பான அழைப்புகளை துண்டிப்பதற்கான உரிமையை வழங்கும், தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Disconnect Rights Bill: பணி நேரத்திற்குப் பிறகு அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்புகளை துண்டிக்க புதிய மசோதா வழிவகை செய்துள்ளது.
ஊழியர்களுக்கான தனிநபர் மசோதா:
அலுவலக நேரம் முடிவடைந்ததற்கு பிறகு பணி தொடர்பான அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு ஊழியர்கள் பதிலளிப்பதை தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, தனியார் உறுப்பினர் மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருவருமே அரசாங்க சட்டம் தேவை என்று நம்பும் பிரச்னைகளில் மசோதாக்களை அறிமுகப்படுத்தலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முன்மொழியப்பட்ட மசோதாவிற்கு அரசாங்கம் பதிலளித்த பிறகு தனிநபர் மசோதாக்கள் திரும்பப் பெறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மசோதா என்ன?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, "தொடர்பை துண்டிக்கும் உரிமை மசோதா, 2025 (Disconnected Rights Bill)"-ஐ அறிமுகப்படுத்தினார். இது ஊழியர் நல ஆணையத்தை நிறுவ முயல்கிறது. இந்த மசோதா, ஒவ்வொரு பணியாளருக்கும் உத்தியோகபூர்வ வேலை நேரத்திற்கு அப்பால் மற்றும் விடுமுறை நாட்களில் வேலை தொடர்பான அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும் நெருக்கடியை தவிர்க்கும் உரிமையை வழங்க முன்மொழிகிறது. மேலும், ஊழியர்கள் அத்தகைய தகவல்தொடர்புகளுக்கு பதிலளிக்க மறுப்பதற்கும் தொடர்புடைய விஷயங்களை நிவர்த்தி செய்வதற்கும் அனுமதிக்கும் விதிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா இத்தகைய விதிகளை நிறைவேற்றியது. இதனால் இந்தியாவில் வேலை-வாழ்க்கை சமநிலையில் கவனம் செலுத்துவது தொடர்பான பேச்சு மீண்டும் அதிகரித்தது. புனே EY ஊழியரின் மரணம் மற்றும் தொழில்துறை தலைவர்களின் மாறுபட்ட கருத்துக்களைத் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது குறித்த விவாதங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன.
எப்போதும் இணைக்கப்பட்டு இருக்கும் டிஜிட்டல் சூழலில், வேலை நேரங்களுக்குப் பிறகு அழைப்புகள் அல்லது செய்திகளை நிராகரிக்க ஆஸ்திரேலிய சட்டம் தொழிலாளர்களை அனுமதிக்கிறது, இது ஒரு முக்கிய பாதுகாப்பாகும். இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா, சட்டமாகுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆய்வுகள் சொல்வது என்ன?
கடந்த ஆண்டு உலகளாவிய வேலைவாய்ப்பு தளமான இன்டீட் நடத்திய ஆய்வில் , இந்தியாவில் முறையான "துண்டிப்பு உரிமை (Disconnect Rights)" கொள்கைக்கு வலுவான ஆதரவு கிடைத்தது. வேலை நேரத்திற்குப் பிறகும் அலுவலக பணிகள் தொடர்பான இணைப்பு என்பது பரவலாக இருப்பதை ஆய்வு காட்டுகிறது. 88 சதவீத ஊழியர்கள் வேலை நேரத்திற்கு பிறகும் அலுவலகத்தால் வழக்கமாகத் தொடர்பு கொள்ளப்படுவதாகவும், 85 சதவீதம் பேர் நோய்வாய்ப்பட்ட விடுப்பு அல்லது விடுமுறை நாட்களிலும் கூட அலுவலக தொடர்பை பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர் இக்கட்டான சூழலிலும் பலர் பதிலளிக்க வேண்டிய அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 79 சதவிகிதம் பேர் அத்தகைய தகவல்தொடர்புகளைப் புறக்கணிப்பது தங்களின் தொழில் வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும், வேலையை தாமதப்படுத்தும் அல்லது எதிர்கால பதவி உயர்வுகளைப் பாதிக்கும் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமுறைகளும்.. மாறுபடும் பார்வைகளும்..
ஆய்வின் போது, ஒரு தெளிவான உண்மை வெளிப்பட்டது. 1946 மற்றும் 1964 க்கு இடையில் பிறந்த பேபி பூமர்கள் - அலுவலக நேரத்திற்கு அப்பால் தொடர்பு கொள்ளும்போது (88 சதவீதம்) பாராட்டப்பட்டதாக உணர அதிக வாய்ப்புள்ளது, ஜென் இசட் (1997-2012) பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பணி நேர எல்லைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக, ஜென் இசட் தொழிலாளர்களில் 63 சதவீதம் பேர் துண்டிக்கும் உரிமை மதிக்கப்படாவிட்டால் வேலையை விட்டு விலகுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.





















