(Source: ECI/ABP News/ABP Majha)
"அவர நம்ப முடியாது" மீண்டும் பல்டி அடிப்பாரா நிதிஷ் குமார்.. பாஜக பக்கம் சாய்கிறாரா?
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என நிதிஷ் குமார் விரும்பியதாக கூறப்படுகிறது.
தேசிய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த இவர், பிகார் மாநில முதலமைச்சராக 8 முறை பதவி வகித்துள்ளார். பாஜகவுக்கு எதிரான INDIA கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய இவர், ஒரு காலத்தில் பாஜகவுடன் நெருக்கமான உறவை பேணி வந்தார்.
மீண்டும் பல்டி அடிப்பாரா நிதிஷ் குமார்?
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை தொடங்கி ரயில்வே வரை பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார்.
பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் முதலமைச்சரானார்.
2015ஆம் ஆண்டு, யாரும் எதிர்பாக்காத நேரத்தில், பரம எதிரியாக கருதப்படும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் லாலுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திதார். தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மீண்டும் முதலமைச்சரானார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி மெகா கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
பின்னர், மீண்டும், பாஜகவுடன் கைகோர்த்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் சந்தித்தார். தன்னுடைய கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறி, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து மீண்டும் விலகி லாலுவுடன் கைகோர்த்தார். இப்படி, மாறி மாறி கூட்டணி வைத்த நிதிஷ், பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.
பாஜக கூட்டணிக்கு திரும்புகிறாரா நிதிஷ் குமார்?
இப்படிப்பட்ட சூழலில், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த லலன் சிங்குக்கும் நிதிஷ் குமாருக்கும் பல விவகாரங்களில் மாற்று கருத்து நிலவி வந்ததாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.
கட்சியின் தலைவராக லலன் சிங் செயல்பட்ட விதம், மற்ற மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் எனவே அவரை மாற்ற வேண்டும் என நிதிஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. அதுமட்டும் இன்றி, லாலுடன் நெருக்கமான நட்புறவை பேணி வந்ததால்தான் அவர் தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையே, அவர் பாஜக கூட்டணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு செக் வைப்பதற்காகவே நிதிஷ் குமார், இம்மாதிரியான வதந்திகளை கிளப்பி விடுவதாக பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி விமர்சித்துளார்.
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என நிதிஷ் குமார் விரும்பியதாகவும் ஆனால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என INDIA கூட்டணியின் ஆலோனை கூட்டத்தில் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மம்தாவின் செயலால் நிதிஷ் அதிருப்தில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.