பீகாரில் புதிய கூட்டணி கணக்கு... யாருக்கு முதலமைச்சர் பதவி?
பீகாரில் புதிய அரசை அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. தற்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமார், எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இணைந்து ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பீகாரில் புதிய அரசை அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. தற்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமார், எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இணைந்து ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய கூட்டணி கணக்கு
புதிய கூட்டணி கணக்கின்படி, நிதிஷ் குமார் முதலமைச்சராகவும் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு ஏற்க உள்ளனர்.
அதேபோல, அமைச்சரவையை முடிவு செய்யும் உரிமை, நிதிஷ் குமாருக்கே உள்ளது. சபாநாயகர் பொறுப்பு, தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு செல்ல உள்ளது.
பின்னர், இன்று மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இதில், நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளத்தை பிளவுபடுத்த பாஜக செயல்படுவதாக நிதிஷ் குமார் இன்று காலை குற்றம் சாட்டிய பின்னர், தனது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், பாஜக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார். இதையடுத்து, தேஜஸ்வி யாதவ் தனது எம்எல்ஏக்களை சந்தித்து நிதிஷ் குமாருடன் மீண்டும் இணைவதற்கு முறையாக ஒப்புக்கொண்டார்.
2015 ஆம் ஆண்டில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியை அமைக்க பாஜகவுடனான நீண்ட கால கூட்டணியை நிதீஷ் குமார் முறித்துக் கொண்டார். 2017 ஆம் ஆண்டில், ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து, நிதிஷ் மீண்டும் பாஜக கூட்டணிக்குத் திரும்பினார். இருப்பினும், இரண்டு கட்சிகளும் பல்வேறு விவகாரங்களில் பரஸ்பரம் விமர்சித்து கொண்டே இருந்தன.
இரு கட்சிகளுக்கு இடையேயான பிரச்னை, அமித் ஷாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஆர்.சி.பி. சிங் மீது நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, உச்சக் கட்டத்தை எட்டியது. முன்னதாக, நிதிஷ் குமாரின் கட்சியின் தலைவராக ஆர்.சி.பி. சிங் இருந்தார்.
பாஜக தலைமையிலான அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஒரே அமைச்சராக ஆர்.சி.பி. சிங் பதவி வகித்து வந்தார். கடந்தாண்டு நடைபெற்ற அமைச்சரவை வரிவாக்கத்தின் போது சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில், ஒரே ஒரு அமைச்சர் பதவி மட்டும் ஒதுக்கப்பட்டதால் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் நடந்தது போலவே, ஆர்.சி.பி. சிங்கை பயன்படுத்தி ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க அமித் ஷா முயற்சித்ததாகவும் எனவே இதனை முன்கூட்டியே கணித்த நிதிஷ், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்