Niti Aayog Developing State List: நிதி ஆயோக் மாநிலங்களின் வளர்ச்சி பட்டியலில் தொடர்ந்து கேரளம் முதலிடம்; தமிழகத்திற்கு 2-வது இடம்!
சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலை நிதி ஆயோக் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது
சமூகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில், அதிக வளர்ச்சியை பெற்றதாக நிதி ஆயோக் மாநிலங்கள் பட்டியலில், இந்தாண்டும் கேரளம் தொடர்ந்து முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்தினையும் பிடித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கு அடிப்படையில் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து எஸ்டிஜி அட்டவணையை நிதி ஆயோக் தயாரித்து வருகிறது. இதன் மூலம் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலை நிதி ஆயோக் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி ஆயோக்கின் மாநிலங்களின் வளர்ச்சி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் வளர்ச்சி பெற்றதாக 75 புள்ளிகளுடன் கேரளம் தொடர்ந்து முதல் இடத்தினைப்பெற்றுள்ளது. அதனையடுத்து ஹிமாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு 2 வது இடத்தினையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நிதி ஆயோக் பட்டியில் தமிழ்நாடு 4 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பீகார், ஜார்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்களில் வளர்ச்சியில் மோசமடைந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜூவ் குமார் தெரிவிக்கையில், மாநிலங்களின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து கண்காணிப்பட்டு நிதி ஆயோக்கின் கீழ் வெளியிடப்படும் பட்டியல்கள் உலகம் முழுவதும் பாராட்டினைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பட்டியலிடுவதற்கு உதவியாக உள்ளது. இதோடு கடந்த 2018-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வரையறுத்த அளவுகளின் படி இந்தியாவிற்கான புள்ளிகள் 57-ஆக தான் இருந்தது. ஆனால் சுகாதாரம், நீர்வளம், மின்சாரம் போன்றவற்றில் வளர்ச்சியை எட்டுவதன் காரணமாக இந்தியாவில் புள்ளிகள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வருகின்ற 2030-ஆம் ஆண்டிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 17 இனங்களில், 169 புள்ளிகளுடான இலக்கினை நிதி ஆயோக்கின் மாநில வளர்ச்சி பட்டியல் அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.