பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ராஜஸ்தான் முதலமைச்சர் பேசினாரா? நிர்பயாவின் தாய் சரமாரி கேள்வி
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசியிருப்பது வேதனையாகவும் சங்கடமாகவும் இருப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு, டெல்லியில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, நிர்பயா சட்டம் அமல்படுத்தப்பட்டது.
It's a very embarrassing statement, this is painful, especially to those families & girls who've been victims such of heinous crimes. He (CM Gehlot) has made fun of Nirbhaya, the law was made by their govt: Nirbhaya's mother Asha Devi on Rajasthan CM Ashok Gehlot's statement https://t.co/rpTpWUXWLt pic.twitter.com/p4PigCnPcP
— ANI (@ANI) August 7, 2022
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசியிருப்பது வேதனையாகவும் சங்கடமாகவும் இருப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். கெலாட்டின் கருத்து குற்றவாளிகளை ஆதரிக்கும் மனநிலையை பிரதிபலிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் நிர்பயா சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதிகரித்திருப்பதாக கெலாட் கூறியிருந்தார். “நிர்பயா வழக்குக்குப் பிறகு குற்றவாளிகளைத் தூக்கில் போடும் சட்டத்தின் காரணமாக, பாலியல் வன்கொடுமைக்கு பிறகு கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது நாட்டில் காணப்படும் ஆபத்தான போக்கு” என கெலாட் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து ஆஷா தேவி பேசுகையில், "அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்பே சிறுமிகள் கொல்லப்பட்டனர். கெலாட்டின் கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களின் மனநிலைதான் மோசமானது. சட்டம் அல்ல" என்றார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இது மிகவும் சங்கடமான கருத்து. குறிப்பாக இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சிறுமிகளுக்கும் இது வேதனையளிக்கும். அவர் (கெலாட்) நிர்பயாவை கேலி செய்திருந்தார். அவரின் அரசுதான் இந்த சட்டத்தை இயற்றியது.
இந்த சட்டம் வருவதற்கு முன்பே, சிறுமிகள் கொல்லப்பட்டனர். இது அவரின் (கெலாட்) குற்றவாளிகளை ஆதரிக்கும் மனநிலையை காட்டுகிறது. சட்டம் மோசமானதல்ல. மக்களின் மனநிலைதான் மோசமாக உள்ளது. அவர் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.
கெலாட்டின் கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கெலாட், "நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன். ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் போதெல்லாம், அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்ற பயத்தில் அவர்களைக் கொல்கிறார்கள். இவ்வளவு மரணங்கள் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்