Modi Manipur Visit: 800+ நாட்களுக்கு பின் வழியறிந்த மோடி, எரியும் மணிப்பூரில் பிரதமர் விழா - வாழ்வின்றி தவிக்கும் மக்கள்
PM Modi Manipur Visit: மணிப்பூரில் 2023ம் ஆண்டு வெடித்த கலவரத்திற்குப் பிறகு முதன்முறையாக, பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

PM Modi Manipur Visit: மணிப்பூரில் இரண்டு பிரிவினர் இடையே வெடித்த மோதலுக்கு, தற்போது வரை உரிய தீர்வு காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
மணிப்பூர் செல்லும் பிரதமர் மோடி:
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏறட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், கடும் பொருட்சேதங்களும் ஏற்பட்டன. இந்நிலையில் தான், அந்த மோதல் வெடித்த சுமார் 840 நாட்களுக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூருக்கு பயணிக்க உள்ளார். பிற்பகல் 12.30 மணியளவில் மிசோரமின் ஐஸ்வாலில் இருந்து கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூர் மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி , மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்துரையாட உள்ளார். மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அமைதி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றவும் உள்ளார்.
உற்சாக வரவேற்பிற்கு ஏற்பாடு:
கலவர பாதிப்பில் இருந்து மணிப்பூர் மக்கள் முழுமையாக தற்போது வரை வெளிவராத நிலையில், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம். சாலையில் ஆங்காங்கே வளைவுகள், மாநிலத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பிரதமருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாம். இது பாதிக்கப்பட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு மணிப்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த முடியாதவர்களுக்கு ஆட்சி செய்ய உரிமை இல்லை” என பேசியிருந்தார். ஆனால், 28 மாதங்களாக அங்கு நிலவி வரும் பிரச்னைகள் குறித்து மோடி வாய் திறக்காதது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஒருவழியாக பிரதமர் மோடி மணிப்பூருக்கு பயணித்தாலும், அங்கு இன்னும் பல முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவே இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
மணிப்பூரில் தீராத பிரச்னைகள்
- வன்முறை தொடங்கியபோது போராளிக் குழுக்களால் மாநிலத் தலைநகரில் உள்ள அரசு ஆயுதக் கிடங்குகளில் இருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்கள் தற்போது வரை மீட்டெடுக்கப்படவில்லை. AK-47கள் முதல் மோர்டார் வரை 6,000க்கும் மேற்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மே 2023 இல் கொள்ளையடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பாலியல் வன்முறை மற்றும் தீ வைப்பு போன்ற பல அட்டூழியங்களுக்கான உறுதியான வீடியோ ஆதாரங்கள் பொதுவில் வெளியிடப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை
- மணிப்பூர் இன்று இன அடிப்படையில் பிரிவினைக்கு உள்ளான ஒரு மாநிலத்தைப் போன்று உள்ளது. சிவில் ஒழுங்கை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பது பிரிவினையை வழக்கமாகிவிட்டது
- வன்முறையைத் தூண்டுவதிலும், மெய்தி குழுக்கள் ஆயுதக் கிடங்குகளைக் கொள்ளையடிப்பதற்கு அனுமதிப்பதிலும் முன்னாள் முதலமைச்சர் பிரைன் சிங்கின் பங்களிப்பு இருப்பதாக, வெளியான ஆடியோ தொடர்பான வழக்குவிரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
- மாநில எல்லையை வேலியிட்டு உள்ளூர்வாசிகளின் நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகளை இறுக்குவதில் அரசு தற்போதும் தீவிரம் காட்டி வருகிறது
- நாடுகடந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் இந்தப் பகுதி சிக்கிக்கொள்வது மேலும் ஆழமடைந்துள்ளது. கசகசா சாகுபடியை நம்பியிருக்கும் சமூகங்களுக்கு உண்மையான தீர்வுகளை வகுப்பதற்குப் பதிலாக, முழு இனக்குழுக்களையும் சட்டவிரோதமானவர்கள் என்று முத்திரை குத்தப்படுவதாக புகார்கள் உள்ளன.
- மணிப்பூர் மாநிலம் இந்தியாவின் மிக நீண்ட இணைய முடக்கத்தை சந்தித்துள்ளது, இது டிஜிட்டல் துறைக்கு மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான முடக்கம் தகவல் தொடர்புகளை முடக்கியுள்ளது, பத்திரிகையாளர்களை வாயடைக்கச் செய்துள்ளது மற்றும் மனித உரிமை மீறல்கள் மறைக்கப்படுவதை உறுதி செய்துள்ளது என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
- 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்குவதற்கு தெளிவான பாதை இல்லாமல் தவிக்கின்றனர். கிராமங்கள் இடிந்து விழுந்துள்ளன அல்லது நிரந்தரமாக மாற்றப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. முதலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது மோசமான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முடிவாக, மணிப்பூரில் வன்முறை தொடங்கியதிலிருந்து மோடியின் முதல் வருகை, மனிதாபிமான பேரழிவுக்கான பதில் அல்ல என்பது கடும் விமர்சனங்களாக உள்ளன. பல மாதங்களாக தொடரும்கலவரம், தேர்தல் தோல்வி மற்றும் இடைவிடாத விமர்சனங்களுக்குப் பிறகு மோடி மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.





















