அதானி துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின்: விசாரணையைக் கையில் எடுத்த என்.ஐ.ஏ!
இரண்டு மிகப்பெரிய டேங்கர்கள் நிறையக் கைப்பற்றப்பட்டிருக்கும் இந்த போதைப்பொருளின் ஒட்டுமொத்த மதிப்பு 21,000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் அதானிக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஈரானிலிருந்து வந்த கப்பலில் இருந்து கைப்பற்றபட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வாக தேசிய புலனாய்வு முகமை இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்த முகமையின் வழக்கு இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 120பி-ன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதானிக்குச் சொந்தமான குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் அண்மையில் வருவாய் புலனாய்வுத்துறை கைப்பற்றியுள்ளது. அதுவும் இரண்டு மிகப்பெரிய டேங்கர்கள் நிறையக் கைப்பற்றப்பட்டிருக்கும் இந்த போதைப்பொருளின் ஒட்டுமொத்த மதிப்பு 21,000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
NIA takes over case relating to seizure of 2988 kg of narcotics at Mundra Port, Gujarat.
— Bharti Jain (@bhartijainTOI) October 6, 2021
இதுவரையிலான இந்திய வருவாய் புலனாய்வுத்துறை வரலாற்றிலேயே இது மிகப்பெரிய அளவிலான சேஸிங் எனக் கூறப்படுகிறது. கடந்த 15 செப்டம்பர் அன்று ஈரானிலிருந்து குஜராத் வந்த கப்பலை மறித்து அதில் ஆய்வு செய்தது வருவாய் புலனாய்வுத்துறை. அதில் ஒரு கண்டெய்னரில் 1999.57 கிலோ ஹெராயினும் மற்றொன்றில் 988.64 கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டது. ஒரு கிலோ ஹெராயினின் சந்தை மதிப்பு ஏழு கோடி ரூபாய் என்னும் நிலையில் இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 21,000 கோடி என மதிப்பிட்டுள்ளனர் வருவாய்த்துறையினர். இந்த ஹெராயின்கள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.ஹெராயின் கடத்தியது யார்?
சென்னையைச் சேர்ந்த கணவன் -மனைவி இருவர் விஜயவாடாவை மையமாகக் கொண்டு ஒரு நிறுவனத்தை இயக்கி வருகின்றனர். அவர்கள்தான் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து குஜராத்துக்கு இந்த போதைப்பொருட்களைக் கடத்தியதாகவும் அவை டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த கிரிமினல் ஜோடிகளான சுதாகர் மற்றும் அவரது மனைவி துர்கா வைஷாலி விஜயவாடாவில் ஒரு இறக்குமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஹெராயின் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஈரானிலிருந்து பாண்ட்ஸ் பவுடர்களை இறக்குமதி செய்வதாகச் சொல்லி இவர்கள் இந்த போதைப்பொருட்களைக் கடத்தியிருக்கிறார்கள்
விசாரணை விரைவில் தொடங்கும் நிலையில் இந்த நெட்வொர்க் பின்னணியில் உள்ள கிங்பின் யார் என்பது தெரியவரும் என்றும் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இதுதொடர்பாக சென்னை, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் இதுதொடர்பாக சோதனையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் பட பாணியில் தாதாக்கள் பொருட்களைக் கடத்தும் சீன்கள் ரியல் லைஃபில் இந்தியாவில் நடந்திருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.